சென்னையில் பரவும் கரோனா: கடுமையாகும் பாதுகாப்பு ஏற்பாடுகள்..
சென்னையில் கரோனா தீவிரமாக பரவுவதையொட்டி பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்படுகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் மேலும் குறைக்கப்பட உள்ளது.சென்னையின் நிர்வாகத்தை கவனிக்க 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகம் இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் ஒரு மாநிலமாக அதிக அளவில் கரானா தொற்று பரவலை கொண்டுள்ளது.
மற்றொருபுறம் அதிகமான அளவில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. கிட்டத்தட்ட 26 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன.
அதிலும் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் கரோனா பரிசோதனையில் வந்த எண்ணிக்கை 76 இதில் கிட்டத்தட்ட 55 பேர் சென்னை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் தொற்று கண்டறியப்பட்ட 33 பேரில் 15 பேர் சென்னையில் உள்ளனர். முக்கியமாக மண்டலம் 1(திருவொற்றியூர்) மண்டலம் 5 (ராயபுரம்) மண்டலம் 8 (அண்ணாநகர்) ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் கரோனா தொற்று உள்ளது தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக (மண்டலம் 5) ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் தொற்றுள்ளவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் மண்டல உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
அதிகம் தொற்று பரவுகிற சென்னையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக தொற்று அதிகம் உள்ள இடங்களை மூன்று பாகங்களாக பிரித்து முதல் பகுதியில் கடுமையான பாதுகாப்பு உள்ளிருந்து மக்கள் வெளியே வராமல் அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை ஊழியர்கள் மூலம் அளிப்பது என்றும், இரண்டாவது கட்டத்தில் வெளியாட்கள் உள்ளே வராமல் உள்ளிருக்கும் மக்கள் வெளியே செல்லாத அளவிற்கு பாதுகாப்பும், மூன்றாவது நிலையில் போக்குவரத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட பல ஆலோசனைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து ஊரடங்கை கடுமையாக அமுல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதேவேளையில் சென்னை கரோனா பரவும் வேகத்தை தடுத்து நிறுத்த பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தடுக்கவும், கரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துதல், அவர்கள் வெளியே சுற்றுவதை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னையின் பாதிப்பை குறைக்க தலைமைச் செயலகத்தில் இன்று காலை 19 மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி சென்னை 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்ட நிலையில் புதிதாக 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சிஎம்டிஏ அதிகாரி. கார்த்திகேயன். இவர் 2 முறை சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பு வகித்தவர். மற்றொருவர் நகராட்சி நிர்வாக அதிகாரி பாஸ்கரன்.
சென்னையில் இன்னும் ஓரிரு நாளில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என தெரிகிறது. இதுதவிர காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே சென்னையில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலேயே அதிக அளவில் வழக்குகளும், வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் தேவையின்றி அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தடுக்கவும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன்படி இனி இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று என்ற உத்தரவும் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. வரும் காலங்களில் சென்னையில் போக்குவரத்து கடுமையாக முடக்கப்படும்