தமிழகத்தில் கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணியில் புலனாய்வுப் பிரிவு போலீஸார்: மூன்றில் ஒரு பகுதியினர் வரவழைப்பு

ரயில்வே, உணவுக் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட புலனாய்வுப் (யூனிட்) பிரிவுகளில் பணிபுரியும் போலீஸாரில் 3-ல் ஒரு பகுதியினரை கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கரோனா வைரஸ் தடுப்புக்கென நாடு முழுவதும்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


அத்தியாவசியத் தேவையை தவிர்ந்து, வெளியில் வருவோரைத் தடுக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தவும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட எல்லைகள் சீல் வைத்து, வாகனங்கள் தடுக்கப்படுகின்றன.


தொடர்ந்து இரவு, பகல் பாராமல் ஒய்வின்றி தொடர்ந்து பணியிலுள்ள போலீஸார், வீட்டுக்கு சென்றாலும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தொடர் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் சுழற்சி முறையில் ஓய்வெடுக்கும் வகையில் எண்ணிக்கையை அதிகரிக்க காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.


இதற்காக ரயில்வே இருப்புப் பாதை, உணவுக் கடத்தல் தடுப்பு, சிபிசிஐடி உட்பட பல்வேறு புலனாய்வு பிரிவுகளில் அந்த மாவட்டங்களில் பணிபுரியும் எண்ணிக்கையில் 3-ல் ஒரு பகுதி போலீஸாரை கரோனா தடுப்பு பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.


காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் பல்வேறு புலனாய்வு பிரிவுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.


இவர்களில் ஒரு பங்கு போலீஸார், அதிகாரிகளை கரோனா தடுப்புப் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு அந்தந்த காவல் ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள் பணி ஒதுக்கீட்டை வழங்கினர். இன்று முதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதன்மூலம் தொடர்ந்து ஊரடங்கு பாதுகாப்புப் பணியிலுள்ள பலருக்கு ஓய்வெடுக்கும் வாய்ப்புள்ளது,’’ என்றார்.