கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்க”: உச்சநீதிமன்றம் உத்தரவு 

 


கொரோனா பரிசோதனையைத் தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 5,274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 402லிருந்து 411 ஆக உயர்ந்துள்ளது.


கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது.


அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை இலவசம் என்றால் தனியார் மருத்துவமனைகளில் 4500 கட்டணம் என அரசே நியமித்து இருந்தது. இருப்பினும், ஏழை மக்கள் 4500 ரூபாய் கொடுத்து எப்படி கொரோனா பரிசோதனை செய்துகொள்வார்கள் என்ற கருத்துக்கள் எழுந்தன.


இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா பரிசோதனையை அரசு மற்றும் தனியார் மையங்களில் கட்டணமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அத்துடன், கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள உடனே அரசாணையை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.