ஏடிஎம்மில் எடுக்காமல் விடப்பட்ட பணம்: வங்கியில் ஒப்படைத்த உதவித் தலைமை ஆசிரியர்...
ஊரே கரோனா களேபரத்தில் கலவரப்பட்டுக் கிடக்க, நாகையில் ஏடிஎம் ஒன்றில் யாரோ எடுக்கத் தவறிய பணத்தை பள்ளி ஆசிரியர் ஒருவர் எடுத்து, வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நடந்திருக்கிறது.
நாகை புத்தூர், அண்ணாசிலை அருகே ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காலை சுமார் எட்டரை மணி அளவில் அங்குள்ள ஏடிஎம் மெஷினிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை வெளிவந்து எடுக்கப்படாமல் இருந்தது.
அங்கு பணம் எடுப்பதற்காகச் சென்ற அக்கரைப்பேட்டை அரசுப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கஜேந்திரன் அந்தப் பணத்தை எடுத்து நாகை ஸ்டேட் வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
யாரோ பணம் எடுப்பதற்காக முயற்சித்து எடுக்காமல் விட்டுச் சென்ற பணம் என்று வங்கித் தரப்பில் கூறப்படுகிறது.
பணத்தை விட்டுச் சென்றவர்கள் தக்க ஆதாரத்தைக் காண்பித்து சரியான தொகையைக் கூறி ஸ்டேட் வங்கிக் கிளையில் தங்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கித் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை சமூகப் பொறுப்புடன் எடுத்து வங்கிக் கிளையில் ஒப்படைத்த உவித் தலைமையாசிரியர் கஜேந்திரனை வங்கிப் பணியாளர்களும் சக ஆசிரியர்களும் பெரிதும் பாராட்டினர்.