வெயிலுக்கு பந்தல்.. நேர்த்தியாக சமூக இடைவெளி: அசத்தும் ஊராட்சிக்கு குவியும் பாராட்டு!

கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிப்பதை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு


ரூ.1000 ஆயிரம் ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இவற்றின் விநியோகம் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதற்கிடையில் இப்பொருட்களை வாங்குவதற்கான டோக்கனை பெற ரேஷன் கடைகளில் மக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.


இதையடுத்து டோக்கன் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பம்புலம் கிராமத்தில் முறையான சமூக இடைவெளியுடன் மிகுந்த பாதுகாப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டன.


பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை தடுக்க பந்தல் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் நிற்க வைக்கப்பட்டனர். அதற்கு பின் ஒவ்வொருவருக்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டது.

டோக்கன் முறைப்படி பொதுமக்கள் வருவதால் அங்கு மக்கள் நெரிசலும் இல்லை. மக்களின் நலன் கருதி சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, முறையான நடவடிக்கை எடுத்துள்ள ஊராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.