தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் இல்லை: முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வு குறித்து தமிழகத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் தளர்வு எதுவும் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இதனை தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கைகள் முனைப்புடன் எடுக்கப்பட்டு வருகின்றன.


ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தி பொதுமக்கள் வெளியில் அதிகம் சுற்றாமல் சமூக விலகலைக் கடைபிடிக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவல்லாமல் கரோனா நோய் சிகிச்சைக்காக பல்வேறு நடவடிக்கைகளை பொது சுகாதாரத்துறையும், உள்ளாட்சி நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து எடுத்து வருகின்றன.


தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டும், 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டும் அவர்கள் பரிந்துரைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏப்.14-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு அதன் பின்னரும் நீட்டிக்கப்பட்டது.


அவ்வாறு நீட்டிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கழு பரிந்துரைத்தது. மத்திய அரசும் மே 3 வரை ஊரடங்கை நீட்டித்தது. இந்நிலையில் திடீரென ஏப் 20-க்குப் பிறகு சில தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு அறிவித்தது.


ஆனால், ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காவிட்டால் கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் எனப் பலரும் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ நிபுணர்குழு இம்முறையும் பரிந்துரையை அளித்துள்ளது.


இதுதவிர இந்தியாவில் கரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. 22-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக உள்ள நிலையில் ஊரடங்கு தளர்வு குறித்த அடுத்த நடவடிக்கை என்ன என்பது


குறித்து இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும், அனைத்துத் துறைச் செயலர்கள், தலைமைச் செயலர், காவல் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் அனைத்து அம்சங்களும் ஆராயப்பட்டதில் ஏப் 20க்கு மேல் எந்த மாவட்டத்திலும், எந்தத் துறையிலும் ஊரங்கு தளர்வுகள் இல்லை. அதே நிலை தொடரும். மே 3 வரை ஊரடங்கு நீடிக்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபற்றி அரசு அறிவிப்பு வருமாறு: “ஏப்15 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.


டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்க முடிவெடுத்துள்ளன.


தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது.


அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.


அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ஆம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.


அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)