கோயம்பேடு வியாபாரியால் கொத்துக்கொத்தாக பரவல்.. ஒரு நாளில் 47 பேருக்கு கொரோனா.. அதிரும் சென்னை.

சென்னை: திங்கள்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது. இதில் 47 பாதிப்பு சென்னையில் இருந்தது. குறிப்பாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரியுடன் தொடர்புடைய நெருங்கிய 13 பேரை கொத்துக்கொத்தாக பாதித்துள்ளது.


மதுரை நான்கு பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவரக்கும் கொரோனா பாசிட்டிவ் நேற்று ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,937 ஆகஉயர்ந்துள்ளது.


அதேநேரம் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 809 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 81 பேர் குணமாகி வீடு திரும்பினர். இறப்புகள் எதுவும் நேற்று பதிவாகவில்லை.


கொத்துகொத்தாக பாதிப்பு
நேற்றைய பாதிப்பில் கோயம்பேட்டில் ஏற்பட்ட (கோயம்பேடு கிளஸ்டர் ) கொத்துக்கொத்தான பாதிப்பு சுகாதார துறை அதிகாரிகளை கவலைக்குள்ளாகி உள்ளது. ஏனெனில் சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து பிற பகுதிகளிலிருந்தும் மக்கள் காய்கறி வாங்கவும் விற்கவும் கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்திற்கு வருகிறார்கள்.


கோயம்பேடு நிலவரம்
இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காய்கறி விற்பனையாளர், கோயம்பேட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள பாடி குப்பத்தில் வசிக்கிறார்.


இந்நிலையில் திங்கள்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேரில் அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் அடக்கம். கடந்த வாரம், பூ மார்க்கெட்டில் பூ விற்பனை செய்பர் மற்றும் அவருடன் தொடர்புடைய மூன்று பேர் மற்றும் குண்டார்த்தூரைச் சேர்ந்த ஒரு காய்கறி விற்பனையாளர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என ஆறு பேர் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


கோயம்பேடு சந்தையில் இருந்து குறைந்தது நான்கு அல்லது ஐந்து வியாபாரிகளையும் , அவர்களது குடும்ப உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 20 பேர் கடந்த ஒரு வாரத்தில்கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது என்று சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இதற்கிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விரும்பாக்கத்தில் சலூன் கடை மூலம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள கலியம்மன் கோயில் தெருவில் ஒருவர் சலூன் கடை வைத்துள்ளார்.


இந்த இடம் கோயம்பேடு சந்தையில் இருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் உள்ளது. அவர் ஊரடங்கை மீறி சட்டவிரோதமாக முடி வெட்டி வந்துள்ளார். அவருக்கு கொரோனா வந்துள்ளது. அவரிடம் முடிவெட்டிய மற்றும் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் கண்காணித்து பரிசோதிக்க முயற்சித்து வருகிறோம் என்றும் மாநகராட்சி அதிகாரி கூறினார். இதனிடையே அந்த முடிவெட்டுபவர் கோயம்பேடு சந்தைக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறினார்.


சமூக விலகல் இல்லை
முன்னாள் நகர சுகாதார அதிகாரி டாக்டர் பி குகானந்தம் சென்னை கோயம்பேடு கொரோனா பரவல் நிலை குறித்து கூறுகையில், ஊரடங்கின் போது கூட கோயம்பேடு சந்தை நெரிசலாக இருந்தது. சமூக விலகல் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.


கடந்த சனிக்கிழமை அன்று முழு ஊரடங்கிறகு ஒரு நாள் முன்பு சந்தையில் கூட்டம் அலைமோதியது.


இதனால் ஏற்பட போகும் விளைவை பற்றி யோசிப்பதே பயமாக இருக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில் நாம் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். இது மற்ற இடங்களிலும் பரவி இருப்பதாக தெரிகிறது. இதன் விளைவுகளை நாம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பரவும் பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.


தினமும் அதிகரிக்கும் வேகம்
சென்னையில் கொரோனா பரவல் குறித்து பொது சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஏப்ரல் மாதத்தின் முதல் ஏழு நாட்களில், சென்னையில் சராசரியாக ஒரு நாளைக்கு 17 பேருக்கு என கொரோனா அதிகரித்துள்ளது.


இது இரண்டாவது வாரத்தில் ஒரு நாளைக்கு 7 நோயாளிகள் என குறைந்தது, ஆனால் இது மூன்றாவது வாரத்தில் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் என பெரிதாக வளர்ந்தது. நான்காவது வாரத்தில் இன்னும் நாள் செல்ல, செலல்ல சராசரி தினசரி 32 நோயாளிகள் ஆகிறது.


"கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் ஒரு நோயாளிக்கு சராசரியாக தொடர்புகளின் எண்ணிக்கையில் அதிகமாக நேர்மறையாக மாறுகிறது. கடந்த மூன்று நாட்களில், ஒரு நோயாளியின் ஒரு டஜன் தொடர்புகளுடன் குறைந்தபட்சம் ஒரு கிளஸ்டரையாவது (கொத்துக்கொத்தாக) ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பை பார்த்து வருகிறோம்" என்றார்.


1101 பேர் குணம்
இதற்கிடையில், 81 பேர் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா நோயில் இருநது குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,937 பேரில் 1,312 ஆண்கள், 625 பெண்கள். 12 வயதிற்குட்பட்ட 111 பேரும், 13 முதல் 60 வயதுக்குட்பட்ட 1,600 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 226 பேர் ஆவர்.
 
கிளஸ்டர் அதிகரிப்பு
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடையே வளர்ந்து வரும் கொத்துப்பரவலுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையாக போராடுகிறார்கள். திங்களன்று, அண்ணா நகரில் உள்ள சாந்தி காலனியில் வசிக்கும் ஒரு மருத்துவர், சமீபத்தில் மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.


அவருக்கு முதல் பணி ராயபுரம் மண்டலத்தில் வழங்கப்பட்டது. அங்கு ஒரு வாரம் பணியாற்றினார். அவரது வேலையின் ஒரு பகுதியாக, பாரதி மகளிர் கல்லூரியில் சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை சோதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு முதுகலை மருத்துவர்கள் கொரோனாவால் அண்மையில் பாதிக்கப்பட்டனர்.


இதையடுத்து அவர்கள் வசித்த ஆண்கள் விடுதி சனிக்கிழமை மூடப்பட்டு 102 மாணவர்களிடமிருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை டீன் டாக்டர் ஆர் ஜெயந்தி தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்