ஊரடங்கு காலத்தில் இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்: பாராட்டும் காரைக்குடி மக்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஊரடங்கு காலத்தில் இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவரை பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
காரைக்குடி அருகே கண்டனூரைச் சேர்ந்தவர் ஆ.பூபதிராஜா (31). எம்பிபிஎஸ் முடித்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவந்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பிய அவர், புதுவயலில் கிளினிக் நடத்தி வருகிறார். நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் மருத்துவர் பூபதிராஜாவும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்காக தனது கிளினிக்கை மூடினார்.
கிளினிக்கை திறக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை அடுத்து, மூன்று நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறந்தார்.
சிகிச்சைக்காக வருவோரிடம் அவர், மருத்துவர் கட்டணம் வசூலிப்பதில்லை. மருந்துகளை மட்டும் நோயாளிகள் கிளினிக்கிற்கு அருகேயுள்ள மருந்தகத்தில் வாங்கிச் செல்கின்றனர்.
முதியோர், ஆதரவற்றோர், கூலித்தொழிலாளிகளுக்கு மருந்துவர் பூபதிராஜா மருந்துகளை இலவசமாகவே வாங்கிக் கொடுக்கிறார்.
தினமும் காலை, மாலை 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். ஊரடங்கு சமயத்தில் மக்களின் சிரமங்களை அறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் பூபதிராஜா கூறியதாவது: ஊரடங்கு நேரத்தில் மக்கள் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். அதனால் சிகிச்சைக்கு வருவோரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்வோர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், என்று கூறினார்