மதுரையில் செவிலியர், கர்ப்பிணி உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி...
மதுரை அரசு கொரோனா மருத்துவமனை செவிலியர், கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் ஆகிய மூன்று பெண்கள் உட்பட நான்கு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 52 பேருக்கு கோரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,380 ஆக உள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 3,020,650 ஆக இருந்து வருகிறது.
மேலும், தொற்று பரவாமல் இருக்க மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கை அதன்பின் தளர்த்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களிடம் ஆலோசனை செய்துள்ளார். ஆனால் முடிவு என்னவாக இருப்பது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மதுரையில் நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மதுரையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்த நிலையில் 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்க்கு உட்பட நான்கு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் , மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர். அதேபோல் மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் இருவருக்கும் மற்றும் திடீர் நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் காவல்துறையினர் இருவருக்கும், தீயணைப்பு வீரர் ஒருவர் , 3 ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் , ஒரு அரசு மருத்துவமனை செவிலியர் எனத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மதுரையில் சமூக தொற்றுக்கான நிலைக்குச் சென்றுவிட்டதாகக் கருதி பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.