புற்றுநோயால் பாதித்தவர்களுக்குப் பணி விலக்கு: கருணைகாட்டும்படி காவல் துறையினர் கோரிக்கை


கரோனாவால் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பணிக்கு வரவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


இதனால் காவல் துறையில் பணி செய்யும் 55 வயதைக் கடந்தவர்கள் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டில் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகிறார்கள்.


கரோனா பரவல் தடுப்பு முனைப்பில் இரவு பகல் பாராது களத்தில் நிற்கும் காவல் துறையினரில் புற்று நோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்கு ஆளானவர்களும் பணியில் இருக்கிறார்கள். இவர்களும் இப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.


ஆனால், 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு கொடுத்தது போல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று அத்தகைய நோய்களால் பாதிக்கப்பட்ட காவல் துறையினர் கோரிக்கை வைக்கிறார்கள்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், “சாதாரணமாகவே காவல்துறை பணியில் நேரம் காலம் பார்க்க முடியாது. இந்த நிலையில், இப்போது காவல் துறையினர் இன்னும் கூடுதலான விழிப்புடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. இதனால் நேரத்துக்குச் சாப்பாடு இல்லாமல் தூக்கம் கெட்டு நாங்கள் பணியில் இருந்து வருகிறோம்.


இந்த நிலையில், காவல் பணியில் இருப்போரில் எங்களைப் போன்ற நபர்கள் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர பாதிப்பை உண்டாக்கும் நோய்களுக்காகச் சிகிச்சை எடுத்து வருகிறோம். தற்போதைய பணியால் நேரத்துக்கு மருந்து, மாத்திரைகள் எடுக்க முடியாமலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளைக் கூட செய்துகொள்ள முடியாமலும் இருக்கிறோம்.


வயதானவர்களுக்கு கரோனாவால் எப்படி அதிகம் பாதிப்பு ஏற்படுமோ அதுபோலவே புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் எளிதில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


அப்படி எங்களுக்கு நோய்த் தோற்று ஏற்பட்டால் சிகிச்சையளித்துக் காப்பதும் சிரமமான காரியமாகிவிடும். அத்துடன் எங்களது குடும்பத்தினருக்கும் எளிதில் நோய்த் தொற்று பரவ வழிவகுத்துவிடும். காவல்துறையில் மட்டுமல்ல...


எங்களைப் போலவே அர்ப்பணிப்புடன் கூடிய பணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிலும் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களையும் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.


எனவே, தமிழகம் முழுவதும் காவல் துறை, மருத்துவத் துறை மற்றும் தூய்மைப் பணியாளர்களில் யார் யாரெல்லாம் புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்குச் சிகிச்சை எடுத்து வருகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்து அவர்களுக்குச் சிறப்புச் சலுகை அளித்து அவர்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


எங்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காவல்துறை தலைமையும் தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் உரிய கருணை காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்