அரியலூர் : வாரத்தில் இருநாள் வெளியே வர அனுமதி அட்டை !
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இருந்த போதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க,மூன்று நிறத்தில் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்தியதோடு,பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அந்த அட்டையை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "அரியலூர் மாவட்டம் முழுவதும் மக்கள் வெளியே வருவதைத் தடுக்க 3 வண்ணங்களில் அனுமதி அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அரியலூரில் உள்ள 22,760 வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
பச்சைநிற அட்டை இருந்தால் திங்கள் கிழமை,வியாழக்கிழமைகளில் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வெளியே வர அனுமதி.நீலநிற அட்டை இருந்தால் செவ்வாய் கிழமை,வெள்ளிக்கிழமைகளில் வெளியே வரலாம் என்றும், இளஞ்சிவப்பு அட்டை இருந்தால் புதன்கிழமை, சனிக்கிழமை வெளியே வரலாம்" என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்