அபாயகரமான கழிவு என்று நிராகரிக்கப்பட்ட 200 பழைய வென்டிலேட்டர்களை பயன்படுத்த திட்டமா..

சென்னை: ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்த தகுதியில்லாத 200 வென்டிலேட்டர்களை தமிழகத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.  


உலகம் முழுவதும் பெரும் சவாலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. 


இதுவரைஇந்தவைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் நோய் பரவலை தடுப்பதே முக்கியம் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு காய்ச்சல், சளி, வரட்டு இருமல் ஆகியவை தொடங்கி இறுதியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.


இந்த நோயின் தாக்கம் இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்தில் உயிரிழப்பை தடுக்க வெண்டிலேட்டர்கள் மிக அவசியம்


இதனால், தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் வென்டிலேட்டர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.


இந்த இக்கட்டான நிலையில் வென்டிலேட்டர்களை வாங்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, சென்னையை சேர்ந்த ஸ்கைலார்க் ஆபீஸ் மெஷின் என்ற நிறுவனம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து கடந்த 2018ல் இறக்குமதி செய்துள்ள 200 வெண்டிலேட்டர்களை வாங்க தமிழக மருத்துவ சேவை கழகம் முடிவு செய்துள்ளது.  


இந்த 200 வென்டிலேட்டர்களும் அமெரிக்காவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை.
இந்த வென்டிலேட்டர்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்தவுடன் அவற்றை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  


மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விதிகளின் அடிப்படையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அறிவித்ததுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதமும் விதித்தது.


சுங்கத்துறையின் இந்த முடிவை எதிர்த்து அந்த நிறுவனம் சுங்கவரி, கலால்வரி மற்றும் சேவை வரிகள் மேல் முறையீடு தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
நிறுவனத்தின் முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம் சுங்கத்துறை விதித்த அபராதத்தை மட்டும் ரத்து செய்தது.


மேலும், 200 வென்டிலேட்டர்களையும் வாங்கிய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்புமாறும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து வென்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தாங்கள் இறக்குமதி செய்த 200 வெண்டிலேட்டர்களையும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை.  


இந்த வென்டிலேட்டர்கள் தமிழக மருத்துவ பணிக்காக தேவைப்படுகிறது. எனவே, 200 வென்டிலேட்டர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் இதை சிறப்பு வழக்காக கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரி ஸ்கைலார்க் நிறுவனம் சென்னையில் உள்ள வெளிநாட்டு வணிக இயக்குநரகத்திற்கு  கடிதம் அனுப்பியது.  


அதேநேரத்தில் கொள்கை முடிவை தளர்த்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்த வென்டிலேட்டர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக மருத்துவ சேவை கழகமும் வெளிநாட்டு வணிக இயக்குநரகத்திற்கு மார்ச் 31ம் தேதி கடிதம் எழுதியது.


இதையடுத்து, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு துறைமுகத்தில் இருக்கும் 200 வென்டிலேட்டர்களையும் விடுவிக்க வெளிநாட்டு வணிக இயக்குநரகம் ஏப்ரல் 4ம் தேதி உத்தரவிட்டது.  


இந்த வென்டிலேட்டர்களின் தரம், அதன் சிறப்பு, பாதுகாப்பு ஆகியவை குறித்து உரிய சோதனைகளையும், ஆய்வுகளையும் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரதுறை செயலாளர் ஆகியோருக்கு வெளிநாட்டு வணிக இயக்குநரகம் கடிதம் எழுதியது.


ஆனால், இந்த விஷயம் தொடர்பாக எந்த பதிலையும் ஸ்கைலார்க் நிறுவனம் இதுவரை தரவில்லை. வென்டிலேட்டர்களுக்கு உலக அளவில் அதிகமான பற்றாக்குறை உள்ளதாக பல நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்தியாவில் 30 ஆயிரம் வென்டிலேட்டர்கள் உள்ளன.


மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர்கள் தேவைப்படும். இந்த வகையில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே மூச்சுத்திணறல் நிலை வரை செல்ல வாய்ப்பு உள்ளது.


மற்ற நோயாளிகளுக்கு போதுமான மருந்துகள் கொடுத்தாலே போதுமானது.
எல்லா நோயாளிகளுக்கும் வென்டிலேட்டர் தேவையில்லை. சில சீரியசான நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும் என்று மும்பையை சேர்ந்த டாக்டர் சச்சின் ராம்தேக் தெரிவித்துள்ளார்.


தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வென்டிலேட்டர்கள் கூடுதல் தேவை.


அதே நேரத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட வென்டிலேட்டர்களை பயன்படுத்துவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்