சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தந்தை, 2 மகள்கள் பலி

தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணையில் சுவர் இடிந்து விழுந்த கோர விபத்தில் உடல் நசுங்கி தந்தையும் அவரது 2 மகள்களும் உயிரிழந்தனர். தாம்பரத்தை அடுத்துள்ள பீர்க்கன்கரணை சீனிவாச நகரில் வசித்து வந்தவர் ராஜாங்கம் (60). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.


இவருக்கு கலா (40) சுமித்ரா(32) என்கிற இரண்டு மகள்கள் இருந்தனர். கரோனா ஊரடங்கு காலம் ஆதலால் வருமானமின்றி இருந்து வந்துள்ள நிலையில், நேற்று இரவு ராஜாங்கம் அவரது மகள்கள் இருவரும் வீட்டின் முன்பு கட்டில் போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.


அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதியையொட்டி எதிரே உள்ள ஒரு காலி மைதானத்தைச் சுற்றி பெரிய மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அது மிகவும் பழைய சுவர். நேற்றிரவு திடீரென அந்தச் சுவர் பயங்கர சத்தத்துடன் உடைந்து சரிந்து விழுந்தது.


இடிந்து விழுந்த சுவரின் பலமான இடிபாடுகள் ராஜாங்கம் வீட்டின் முன் விழுந்தன. இதனால் அங்கு கட்டிலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.


சுவர் இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இடிபாடுகளுக்குள் ராஜாங்கம், கலா, சுமித்ரா ஆகிய மூவரும் சிக்கிக் கிடப்பதைப் பார்த்து உடனடியாக காவல்துறை, தீயணைப்புத்துறை, 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்தனர்.


சுவரின் இடிபாடுகளை அங்கிருந்த இளைஞர்கள் அகற்றினர். பின்னர் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே ராஜாங்கம் உயிரிழந்தார். இளைய மகள் சுமித்ரா இன்று அதிகாலை 1 மணிக்கும், மூத்த மகள் கலா இன்று காலை 8 மணிக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


இச்சம்பவம் குறித்து பீர்க்கன்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, 2 மகள்கள் உட்பட 3 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த ராஜாங்கத்தின் வீட்டுக்கு தாம்பரம் தாசில்தார் சரவணன், சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் ஆகியோர் நேரில் சென்றனர். ராஜாங்கத்தின் குடும்பத்தாருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.


உடல் அடக்கத்திற்கும், நிவாரணத் தொகை பெறவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்