ஏப்.15 முதல் ரயில், தனியார் விமான நிறுவனங்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதாகத் தகவல்..
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி ரத்து செய்யப்படலாம் என மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து 15ம் தேதி முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதன் காரணமாக பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. மறுபுறம் நாடெங்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கும் பிறகு, தொடரும் என செய்திகள் வெளியாயின.
ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்றும், அப்படி எந்தவொரு முடிவும் அரசு இன்னும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறினார். அவரின் கூற்றை அடுத்து ஒரு நாள் கழித்து இந்திய ரயில்வே மற்றும் சில தனியார் விமான நிறுவனங்கள் ஏப்ரல் 15 முதல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.