“ஒரே மாஸ்க்கை 15 நாட்கள் போடச்சொன்னார்கள்” - ஆந்திராவில் மருத்துவர் கொந்தளிப்பு...

ஆந்திராவில் அரசுக்கு எதிராக பேசிய அரசு மருத்துவர் சில மணி நேரங்களிலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


ஆந்திர மாநிலத்தின் நர்சிபட்டினம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவமனையில் சுதாகர் ராவ் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.


20 வருடங்கள் அனுபவம் கொண்ட இவர், அண்மையில் கொரோனா மருத்துவப் பணிகள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.


அதில் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் போதிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என அரசை குற்றம்சாட்டி பேசியிருந்தார்.


இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால் தான் ஆளுங்கட்சி மீதும் அரசு மீதும் குற்றம்சாட்டுவதாகவும் ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.


இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர் சுதாகர் ராவ், “நாங்கள் பணிபுரியும் மருத்துவமனை உள்ளூர் மருத்துவமனையாக இருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


ஆனால் அரசு தரப்பில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் தரப்படவில்லை. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ஒரு முகக்கவசத்தை மட்டும் கொடுத்தார்கள்.


அதனை நான் 15 நாட்கள் அணிய வேண்டும் என பரிந்துரைத்தார்கள். நாங்கள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என நோயாளிகளை சோதிக்கும் போது எதுவும் நடக்கலாம். இதுதொடர்பாக எம்.எல்.ஏ மற்றும் வட்டாட்சியர் என அனைவரையும் அணுகிவிட்டேன். எந்தப் பலனும் இல்லை” என்று கூறியுள்ளார்.