கொரோனாவுக்கு பனை ஓலை மாஸ்க்: 10 ரூபாய்க்கு விற்பனை

குளத்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் பனைஓலை மாஸ்க் தயாரித்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே கு.சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பனைத் தொழிலாளியான தம்பதி குணசேகரன்-முருகலட்சுமி ஆகியோர் கொரோனாவை தடுக்க பனை ஓலையில் முககவசம் தயாரித்து அணிந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்த செய்தி தமிழ்முரசில் வெளியானது.


இதையடுத்து குணசேகரனை தொடர்புகொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் பனை ஓலை மாஸ்க் எப்படி தயாரிப்பது குறித்து கேட்டறிந்ததுடன் தங்கள் பகுதிக்கு இதுபோல் செய்து தரவேண்டும் என கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.


இந்த நிலையில், விளாத்திகுளம் ஒன்றிய கவுன்சிலர்கள் 14வது வார்டு ராஜேந்திரன், 15வது வார்டு வைத்தியர் குருநாதன் மற்றும் குளத்தூர் பகுதி சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு 100 பனை ஓலை முகக்கவசம் தயாரித்து தரவேண்டினர்.


இதையடுத்து ஒரு முக கவசம் ரூ.10க்கு 100 தயாரித்து வழங்கினர். இதைப் பெற்றுக்கொண்ட சமூக ஆர்வலர்கள் குளத்தூர் பஜார் வீதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தனர்.