அத்தியாவசிய தேவை என்றால் என்ன..
சென்னை : நாடு முழுக்க 21 நாட்களுக்கு, லாக்டவுன் என்று, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், அத்தியாவசிய பொருட்கள் சேவையில் தடை கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், நடைமுறையில் அது கானல் நீராக உள்ளது. பணமதிப்பிழப்பின்போது, எப்படி ஒரு பதற்றம் மக்களிடம் ஏற்பட்டதோ, அதுபோன்ற பதற்றம் இப்போது உருவாகியுள்ளது.
இதற்கு காரணம், காவல்துறையினர் எடுத்து வரும் சில அதி தீவிர நடவடிக்கைகள். மோடி கூறிய அந்த அத்தியாவசிய சேவைகள், மக்களுக்கு கிடைக்காத நிலையில்தான் நாடு உள்ளது. உதாரணத்திற்கு, மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று, காய்கறி சப்ளை. அதுவும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டுக்கே அவை வருவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
பிக்பாஸ்கெட் மக்கள் மார்க்கெட் செல்லாமல் வீட்டிலிருந்தே இப்படி பொருட்களை பெறுவது பாதுகாப்பான நடைமுறை. சீனா போன்ற நாடுகள் இதைத்தான் பின்பற்றின. ஆனால், இந்தியாவில் நடப்பது என்ன? ஆன்லைன் காய்கறி சப்ளையில் முன்னிலையில் உள்ள ஒரு நிறுவனம், பிக்பாஸ்கெட். ஆனால், நாடு முழுவதும் உள்ள பல பிக்பாஸ்கெட் பயனர்களுக்கு அந்த நிறுவனம் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளது.
"அன்புள்ள வாடிக்கையாளரே, அத்தியாவசிய சேவையை செயல்படுத்த மத்திய அரசு வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், பொருட்களை கொண்டு செல்ல முடியாமல், உள்ளூர் அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக நாங்கள் செயல்படமுடியவில்லை. விரைவில் சேவையை திரும்பி கொண்டுவர அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். " என்று கூறப்பட்டது.
சப்ளையர்கள் மீது போலீஸ் தடியடி க்ரோஃபர்ஸ் நிறுவனமும் இவ்வாறு ஆன்லைன் ஆர்டரில் காய்கறி சப்ளை செய்து வருகிறது. அந்த நிறுவனமும் சப்ளை செய்ய முடியவில்லை .
அந்த நிறுவன இணை நிறுவனர் சவுரப் கூறுகையில், ஆன்லைன் டெலிவரி கிடங்குகளை மூடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை நாங்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் லாரிகள் மற்றும் விநியோக பார்ட்னர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். "எங்கள் டெலிவரி நிர்வாகிகள் காவல்துறை மற்றும் உள்ளூர் குண்டர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்" என்று மக்கள் ஊரடங்கு அனுசரித்த நாளன்றே கூறியிருந்தார் அந்த அதிகாரி.