சங்க கால நாணயங்கள் குறியீடு குறித்த நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் சங்க கால நாணயங்கள் குறியீடு குறித்த சிறப்பு நிகழ்ச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.


சென்னை காயின் சொசைட்டி தலைவர் மணிகண்டன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சங்ககால குறியீடுகள் குறித்து பேசுகையில்,
சங்ககாலம் என்பது சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலம் ஆகும். சங்ககால மக்களின் வாழ்க்கை முறைகளையும் பண்பாடுகளையும் அறிந்து கொள்வதற்கு சங்க இலக்கியங்கள் பெரிதும் பயன்படுகின்றன.
 


கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சங்ககாலம் என்று தமிழக அறிஞர்கள் கூறுவார்கள்.
 


சங்ககாலத்தில் தமிழகத்தை சேர ,சோழ, பாண்டிய , மலையமான் அரசர்கள் ஆண்டுவந்தனர்‌. அவர்கள் பயன்படுத்திய காசுகள்  வரலாற்றை அறிய உதவுகின்றன.


முத்திரைக் காசுகள் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு துவக்கம் முதல் கி.மு. 2-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இக் காசுகளை  புராணக் காசுகள்   அல்லது அச்சு குத்திய காசுகள் அல்லது முத்திரைக் காசுகள் என்பர்.


இவ்வகை காசுகளை உலோகங்களை உருக்கி, சம்மட்டி கொண்டு அடித்து  தகடுகளாக  மாற்றி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றின்மேல் முத்திரை பொறிகளை கொண்டு முத்திரை பதித்தனர். 


ஒரு பக்கத்தில் மட்டும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குறியீடுகளும்,  பின்பக்கத்தில் குறியீடுகள் எதுவும் இல்லாமலும் இருந்தன. குறியீடுகளாக குன்றுகள்,  மலைகள்,  மரங்கள்,   மீன்,  கதிரவன்,  சந்திரன்,  யானை,  மயில்,  பாம்பு,  எருது,   வில்-அம்பு போன்ற  நூற்றுக்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.  


இக்காசுகள் பெரும்பாலும் சதுரம்,  நீள் சதுரம்,  வட்டம், நீள்வட்டம் போன்ற வடிவங்களில் இருக்கின்றன.  இவ்வகை நாணயங்கள் இந்தியா முழுவதும் பரவலாக  இருந்துள்ளன.


சங்காலசேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வெள்ளி முத்திரைக் காசுகளை வெளியிட்டுள்ளனர்.


நாணயங்கள் தயாரிக்க 
செம்பு, ஈயம், வெள்ளி, தங்கம்  உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்தியுள்ளார்கள். 


சேரர்கள் காசுகளில் வில் அம்பு,சோழர் காசுகளில் புலி, பாண்டியர்கள் காசுகளில் மீன் சின்னம், மலையமான் காசுகளில் குதிரை சின்னங்கள் பெரும்பாலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. 
சேரர், சோழர்,பாண்டியர் செப்புக் காசுகளில் யானை சின்னம் இடமாகவோ, வலமாகவோ, காசின் முகப்பிலும் அமைந்துள்ளது.  


யானை  உருவத்திற்கு மேலாக  மங்கலச் சின்னங்கள் ஸ்வஸ்திகம்,  கும்பம்,  மத்தளம், திருமறு போன்ற உருவங்களும் சிறு  உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.  காசுகளின் புறத்தில் அந்தந்த மன்னர்களின் குலமரபுச் சின்னங்களான, வில் அம்பு, புலி, அங்குசம் வரை கோட்டுருவில் மீன்  சின்னம் பதிக்கப்பட்டுள்ளது.  


பெரும்பாலும் முகப்பில் யானைச் சின்னமே அச்சிடப்பட்டுள்ளன. குதிரை,  மாடு அல்லது காளை, சிங்கம், மீன்,  ஆமை சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காசுகளின் எடை 500  மில்லிகிராம் முதல் 16  கிராம் எடை வரை பல்வேறு அளவுகளில் செப்புக் காசுகள் உள்ளன என்றார்.


சங்ககால காசுகளில் யானை சின்னம் பொறிக்கப்பட்டதன் நோக்கமானது அரசர்களின் வலிமையையும் மேன்மையையும் காட்டுவதற்காக இருக்கலாம்.  
மாடு,காளை
செல்வத்தை குறிப்பிட மாடு சின்னமாகக் கருதப்பட்டது.  


வலிமையையும் பொலிவையும் காட்டும் சின்னமாக காளை,எருது  உள்ளது. நாணயத்தில் சைவ சமய சின்னமான சிவனின் வாகனமாக கருதப்படும் காளை, நாணயங்களில் பொறிக்கப் பட்டிருக்கக்கூடும்.


பாண்டியனின் செம்பு  காசுகள்,  சேரனின் செம்புக் காசுகளிலும் மாடு சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயங்களில் மீன்  
வளமான வாழ்வையும்,  செல்வச் செழிப்பையும்  காட்ட  மீன் சின்னம் நாணயங்களில் இடம் பெற்றுள்ளன.  


மலையமான் காசுகளில்  முன்பக்கம் குதிரைச் சின்னமும்,  அதனுடன் அங்குசம்,  நந்திபாதச் சின்னம், பிறை,  எருதுதலை, மேடையில் ஒரு தொட்டி போன்ற சின்னங்களில் ஒன்று அமைந்திருக்கும்.  


அதன் பின் பக்கத்தில்  மலை முகடுகளும்,  நதியும்,  நதியில் மீன்கள் நீந்துவது போன்ற உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும் என்றார்.


நிகழ்ச்சியில் நாசர்,முகமது சுபேர், தாமோதரன், மன்சூர், சாமிநாதன், இளங்கோவன், ராஜேஷ், சந்திரசேகரன் உள்ளிட்ட நாணயம் சேகரிப்பாளர்கள் பங்கேற்றார்கள் முன்னதாக செயலர் குணசேகரன் வரவேற்க, பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)