கொரோனா: தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தர்கா, தேவாலயங்களுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடு - முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மேற்கொள்ளபட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ வருமுன் காப்போம் என்பது போல் பல்வேறு பாதுகபாப்பு நடவடிக்கைள் எடுத்து வரப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு விரிவான அறிவுரைகள் உத்தரவுகள் பிறக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு மருத்துவமனை, வீட்டில் தனிமைப்படுத்த நபர்களுடன் சுகாதாரத் துறை அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் தொடர்பு, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகபாப்பு கவசம், உடை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்கள் கூடும் இடங்களில் நாளொன்றுக்கு 2 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
வாரசந்தைகள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட வேண்டும். ஏசி வசதிக்கொண்ட பெரிய ஜவுளிக்கடைகள், பெரிய நகைக் கடைகள், பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் மிகப்பெரிய கடைகள் போன்றவை நாளை முதல் மூடப்படும். நகைக்கடைகளில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்படி பொருட்களை தனி வழியில் பெற்று செல்லலாம்.
அதேசமயம் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய் கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவங்கள் வழக்கம் போல் செயல்படும்.
மக்கள் அதிகமாக கூடும் தமிழகத்தின் முக்கிய திருக்கோவில்கள் வரும் 31ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அதேபோல், தேவாலயங்கள், மசூதிகளிலும் மக்கள் வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களிலிருந்து நோய் பரவாமல் இருக்க போக்குவரத்தை குறைக்க முடிவு எடுக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டுமென்றும் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.