பொதுமக்களைக் கூட வேண்டாமென்று சொல்லிவிட்டு நாம் செய்வது சரியா... - ஸ்டாலின் கேள்வி.....    

                                                                                    உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் மாவட்ட அளவில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமும் ஆலோசனை நடத்தப்பட்டது.


கொரோனாமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.


தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 17 முதல் 20-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெற்றன. ஆனால், துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்படாமலேயே பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காகத் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.கொரோனா அச்சம் காரணமாக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும்


என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும்நிலையில், பேரவையை ஒத்திவைக்கத் தேவையில்லை என்று பதிலளித்திருந்தார்.  


இந்தநிலையில், நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்திவாசியத் தேவைகளின்றி மற்ற எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.


இந்தநிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எடுத்துப் பேசினார்.


அவர் கூறுகையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்களை அதிக அளவில் கூட வேண்டாம் என்று சொல்லியிருக்கும் நிலையில், பேரவைக் கூட்டம் நடைபெறுவது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பினார்.


இதனால், பேரவைக் கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், பேரவைக் கூட்டத்தொடர் குறித்து அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் இன்று மதியம் 1 மணிக்குக் கூடி ஆலோசிக்கும் என்றும் அந்தக் கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


கொரோனா விவகாரத்தால் பேரவைக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)