சர்வதேசப் பெண்கள் நினைவுநாளில் நாம் நினைவு கொள்ள வேண்டியவர்...

🍀வரலாறு ரொம்ப... முக்கியம் அமைச்சரே..🍂


முத்துலட்சுமி பிறந்து வளர்ந்த காலம், வீட்டுக்குள் மட்டும்தான் பெண்ணைப் பார்க்க முடியும் என்ற காலம். வீட்டுப் படியைத் தாண்டினால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள்.


சென்னை மருத்துவக் கல்லூரி ஆண்களால் நிரம்பி இருந்தது.


இருந்த பெண்களும் ஐரோப்பியர்களாக இருப்பார்கள். ‘திரை போட்டு மூடிய வாகனத்தில் நான் போவேன்’ என்கிறார் முத்துலட்சுமி. அந்தக் காலத்தில் படிக்கச் செல்லும் பெண்களைத் தெருவில் நின்று கிண்டல் செய்வார்களாம்.


கல்லூரிப் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு, தனது வகுப்பில் மாணவிகளை உட்காரவே விட மாட்டார். அறுவைச் சிகிச்சை பாடத்தில் முழு மதிப்பெண்ணை முத்துலட்சுமி பெற்ற பிறகுதான் பெண்களும் தனது வகுப்புக்குள் வரலாம், உட்காரலாம் என்று மனம் மாறி இருக்கிறார்.


*முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக் கல்லூரியின் வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு.*


எழும்பூர் மருத்துவ மனையில் அதுவரை பெண் மருத்துவரே இல்லை. முதல் பெண் மருத்துவராக முத்துலட்சுமி உள்ளே நுழைந்தார்.


மருத்துவ உயர்படிப்புக்கு பாரீஸ் சென்றவருக்கு அந்தத் துறையோடு சமூக சேவையும் சீர்திருத்தமும் சேர்த்துப் பார்க்கும் சிந்தனை ஏற்பட்டது. இதில் மிக முக்கியமானது தேவதாசி முறை ஒழிப்பு.


தேவரடியார், பதியிலார், வேசையர், தாசிகள்,கணிகையர், நர்த்தகி, நடன மங்கை எனப் பல்வேறு பெயர்கள் சூட்டப்பட்ட பரிதாபப் பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டார்கள். இந்தப் பெண்களுக்கு உடலில் திரிசூலம், ரிஷபகாளை, சங்கு, சக்கரம் போன்ற ஏதாவது ஒரு முத்திரை பதிக்கப்படும்.


கடவுள் சிலை முன் உட்கார்ந்து தாலியைக் கட்டிக் கொள்வார்கள்.


கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து இந்தப் பழக்கம் நாட்டில் இருந்தது. எட்டு, ஒன்பது வயதுப் பெண் குழந்தைகள் இப்படி பழக்கப்பட்டார்கள்.


சில இடங்களில் வேறு மாதிரியாகவும்  கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆடல், பாடல் கலையே மெல்ல, செல்வந்தர்களின் காம இச்சைகளைத் தீர்க்கும் பாலியல் தொழிலாக மாறிப்போனது.


இது கோயில் நிர்வாக அமைப்பைச் சீரழித்தது. இந்தப் பெண்களை ஒரு கோயிலில் இருந்து இன்னொரு கோயிலுக்கு மாற்றுவது, நகைகளைத் திருடுவது, சிலர் இந்தப் பெண்களை தனியாகப் பிரித்துச் சென்று குடியேற்றுவது, பெண்கள் இதில் இருந்து தப்பித்து  ஓடுவது, ஓடிய பெண்ணை இழுத்து வந்து தண்டிப்பது, இந்தப் பெண்கள், வீட்டிலேயே பணியாளர்களாகக் கிடப்பது, அதனால் பணியாளர்களின் மனைவிகள் பிரச்னையைக் கிளப்புவது என்று பெண் குலமும், கோயிலும் ஒரே நேரத்தில் சிதைந்ததைப் பார்த்துத்தான் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வர முத்துலட்சுமி முயன்றார்.


1927-ம் ஆண்டு நவம்பர் 5-ம் நாள் தீர்மானம் கொண்டு வந்தார்.


கோயில்களில் இப்படி எல்லாம் நடக்கிறது என்பதை 1886-ம் ஆண்டு முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஜோசான் பட்லர். மதத்தில் தலையிட மாட்டோம் என்று விக்டோரியா வாக்குறுதி கொடுத்திருந்ததால் பிரிட்டிஷ் அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை.


மைனர் பெண்களை கோயில் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், வயது வந்த பெண்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பிரிட்டிஷ் அரசு சொன்னதே தவிர, தேவதாசி முறையை ஒழிக்க முன் வரவில்லை.


முத்துலட்சுமி ரெட்டிதான் அதற்கு முயன்றார்.


அதனை அன்றைய தேசியவாதிகளில் சிலரே எதிர்த்தார்கள். அதில் முக்கியமானவர் சத்தியமூர்த்தி. இதை மதத்தின் மீதான தாக்குதலாக சத்தியமூர்த்தி பார்த்தார்; மதவிவகாரங்களில் தலையிடுவது கூடாது என்றார்.


மதம் போய்விடும் என்றார்; தாசிகளை ஒழிப்பது  கலையை ஒழிப்பதற்குச் சமம் என்றார்.


தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாது என்று சென்னை மாகாண சட்டமன்றத்திலேயே சிலர் பேசினார்கள். ‘‘உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் இருந்து எந்தப் பெண்களையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா?” என்று சட்டசபையில் தான் கேட்டதாகவும், அப்போது சட்டசபையே ஸ்தம்பித்து நின்றுவிட்டது என்றும் ஆண் சகோதரர்களும் தலைகுனிந்துவிட்டார்கள் என்றும் முத்துலட்சுமி எழுதி உள்ளார்.


இறுதியில் தேவதாசி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியது.


ஆனால், அதைப் பொதுமக்கள் கருத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுற்றுக்கு விடப்பட்டது.


இது, ராஜாஜி முதல்வராக இருந்தபோது நடைமுறைக்கு வந்தது.


ஆனால் அதனை சட்டசபையில் ராஜாஜி வைக்கவில்லை. ‘‘நம் நாட்டின் சுதந்திரத்துக்காக நிறைய தியாகங்களை ராஜகோபாலாச்சாரியார் செய்திருந்தாலும் சமூக சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை, முக்கியமாக பெண் விடுதலையைப் பொறுத்தவரை அவர் ஒரு பழைமைவாதி. மாற்றத்தை விரும்பாதவர்’’ என்று எழுதி இருக்கிறார் முத்துலட்சுமி


ஓமந்தூர் ராமசாமி  அமைச்சரவையில்தான் 1947-ம் ஆண்டு இந்தச் சட்டம் அமல் ஆனது.


*சர்வதேசப் பெண்கள்* *நினைவுநாளில்*
*நாம் நினைவு கொள்ள வேண்டியவர்*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு