டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு ' குறித்து சகாயம் ஐஏஎஸ் 'மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்!'

துக்குடியில் கின்ஸ் இலவச போட்டித்தேர்வு அகாடமியில் * பயின்று, இந்த ஆண்டு பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 124 மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இவ்விழாவின் தொடக்கத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்செய்பவர்கள், வீட்டில் இருந்தே பயிற்சி பெறும் வகையில் இணையதளத்தை சகாயம் தொடக்கி வைத்தார்.


இந்த அகாடமியின் நிறுவனர் பேச்சிமுத்து, “சகாயம் கைகளால் வெற்றிக் கேடயம் பெற்ற மாணவர்கள், அந்தப் புகைப்படத்தை தங்களின் மொபைல் போன்களில் ஸ்க்ரீனில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை அடிக்கடி பார்க்கும்போது, 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை நினைவுபடுத்தி, நேர்மையுடன் அரசுப் பணிகளில் பணியாற்ற வேண்டும்” என அறிமுக உரை ஆற்றினார்.


பின்னர், மாணவர்கள் மத்தியில் பேசிய சகாயம் ஐஏஎஸ், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 4 போன்ற ஒரு சில தேர்வுகளில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும்கூட, காவல்துறையும் அரசும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.


வேலையின்மை பெரும் பிரச்னையாக உருவெடுத்துவரும் நிலையில், இதுபோன்ற முறைகேடுகளால் பல ஆண்டுகள் இரவு, பகலாகக் கடினமாக உழைத்துவரும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் நிலை ஏற்படும். எதிர்காலத்தில் இத்தேர்வுகள் முறைகேடுகள் இல்லாமல் நடைபெறும் என நம்புகிறேன்.


நேர்மையும் திறமையும் உடைய அதிகாரிகள், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள். தற்போதைய போட்டி மிகுந்த சூழலில், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது மிகச் சாதாரண காரியம் அல்ல. கடினமான உழைப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அரசுப் பள்ளிகள் தான் நம்நாட்டு ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான கடைசி நம்பிக்கை. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களும் அதிக எண்ணிக்கையில் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர இருக்கும் மாணவர்கள், நான் என்ற அகந்தையை மனதிலிருந்து அகற்ற வேண்டும்.


சின்னக் குழந்தைகளிடம் இருந்துகூட நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. தற்போதைய நிலையில் லஞ்சம், ஊழல் நிறைந்திருப்பதை வருத்தத்துடன் பார்க்கிறேன். மாற்றங்களை ஒரு நேர்மையான தமிழ்ச் சமூகத்தை உருவாக்க இளைஞர்களால்தான் முடியும். அரசுப் பணியில் நேர்மையானவர்களாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.


நேர்மை என்றால் ஓராண்டு நேர்மை. மூன்றாண்டு நேர்மை, அதன்பிறகு ஓரளவு நல்ல பெயர் வாங்கிவிட்டால் சாதாரணமாக இருந்து கொள்ளலாம் என்ற எண்ணம் வரவே கூடாது. உண்மையான நேர்மை என்பது பணியின் தொடக்க நாளில் இருந்து பணி ஓய்வுபெறும் கடைசி நாள் வரை இருக்க வேண்டும். 'உனக்கு அதிகாரம் இருந்தால் ஏழைகளுக்கு அதைப் பயன்படுத்து' என முதல் வாசகமாக நான் பணியில் சேர்ந்த அன்று என் அலுவலக அறையின் முன்பாக எழுதினேன்.


இதுபோன்ற ஏதாவது ஒரு வாசகத்தை எழுதி வைக்காவிட்டாலும், மனத்தில் நிறுத்தினால் போதும். ஏழைகளுக்கு பணி செய்வதுதான் இறைவனுக்குச் செய்யும் பணியாகும். நேர்மையாகப் பணி செய்பவனைப் பார்த்தால் லூசு, பைத்தியக்காரன் என்றுதான் சொல்வார்கள். இந்தப் பேச்சுகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது. பணியில் நேர்மை ஒன்றுதான் நமக்கான மகுடம் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்