ஆட்டோ ஓட்டுனரா இல்ல அடியாளா; பேருந்தை மறித்து அட்டகாசம்...!

 


சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் மாநகர பேருந்தை மறித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அட்வைஸ் சொன்ன வாகன ஓட்டிகளை ஆபாசமாக பேசி, அடிப்பதற்காக விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


போக்குவரத்து காவல்துறையினரின் அலட்சியத்தால் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..


சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் இரு பக்கமும் வாகனங்கள் விதியை மீறி நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகி வருகின்றது. போக்குவரத்து காவல்துறையினர் எப்போதாவது பணியில் இருக்கும் இந்த பகுதியில் வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கும் நிலையும் தொடர்கின்றது.


இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி மதியம் இருபுறமும் கார்கள் மற்றும் இரு சக்கரவாகனங்கள் சாலையை அடைத்து நிறுத்தப்பட்டிருந்ததால் அந்த வழியாக சென்ற மாநகர பேருந்து ஒன்று நடு சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது எதிரில் காக்கி சீறுடை அணியாமல் வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பேருந்தை மறித்து ஆட்டோவை நிறுத்தினார். இதனால் பேருந்தும் செல்லமுடியவில்லை பேருந்துக்கு பின்னால் நூற்றுக்கண்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


ஆட்டோ ஓட்டுனர் பின் பக்கம் சென்று சற்று வழிவிட்டிருந்தால் கூட பேருந்து விலகி சென்று இருக்கும்., போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டிருக்காது.


இதனை பார்த்த வாகன ஓட்டிஒருவர் ஆட்டோ ஓட்டுனருக்கு சற்று வழிவிட அறிவுறுத்த சொல்பேச்சு கேட்காத ஆட்டோ ஓட்டுனர் அந்த இரு சக்கரவாகன ஓட்டியை ஆபாசமாக பேசியபடியே அடிப்பதற்காக ஆட்டோவில் இருந்து இறங்கிச்சென்றார்.


வாகன ஓட்டிகள் நகர்ந்து செல்ல முடியாமல் சாலையில் தவித்து நிற்க சாகவாசமாக நடந்து வந்த அடாவடி ஆட்டோ ஓட்டுனர் மீண்டும் ஆட்டோவில் ஏறி நகர மறுத்து அடம் பிடித்தார்.சுமார் 20 நிமிடங்கள் வரை பேருந்தை மறித்துக் கொண்டு அட்டகாசம் செய்த அடாவடி ஆட்டோ ஓட்டுனரை மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் சாமர்த்தியமாக பேசி சமாதானம் செய்தார்.


இதையடுத்து ஆட்டோ செல்லும் அளவிற்கு கிடைத்த இடைவெளியில் அடாவடி ஓட்டுனர் ஆட்டோவை எடுத்துச்சென்றதால் ஒரு வழியாக போக்குவரத்து நெரிசல் தீர்ந்தது.


இத்தனை களேபாரங்களும் அங்கு அரங்கேறிய நிலையில் பெயருக்கு கூட போக்குவரத்து காவல்துறையினரோ, ரோந்து போலீசாரோ அங்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.


குறிப்பாக இந்த சாலையில் உள்ள உணவகங்களில் சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார் மற்றும் இரு சக்கரவாகனங்களை சாலையில் நிறுத்தி செல்வதால் தான் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும் , பள்ளி விடும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாக இருக்கும் என்கின்றனர் தினமும் அந்த வழியாக பயணிக்கும் வாகன் ஓட்டிகள்..!


நகரெங்கும் சிசிடிவி கேமராவைத்து வழிப்பறி கொள்ளையர்களை களையெடுத்து வரும் காவல்துறையினர், நகரின் முக்கிய சாலைகளில் இது போன்று நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும் உறுதியான நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு