தமிழக சட்டசபை கூட்டம் நாளை துவக்கம்! புதிய அறிவிப்புகள் குறித்து எதிர்பார்ப்பு

சென்னை : தமிழக சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது. மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன் நடக்க உள்ள நீண்ட கூட்டத்தொடர் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.


தமிழக சட்டசபையில் பிப்ரவரி 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடந்தது. அதன்பின் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிக்கவும் சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது.


முதல் நாளில் முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். திருவொற்றியூர் எம்.எல்.ஏ. - கே.பி.பி. சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டசபை ஒத்தி வைக்கப்படும்; மறுநாள் சட்டசபை இல்லை.



மீண்டும் 11ம் தேதி சட்டசபை கூடுகிறது. அன்று முதல் தினமும் துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.


இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு போன்றவற்றுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளன.


எனவே இது தொடர்பாக சட்டசபையில் காரசாரமான விவாதம் நடக்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


எனவே அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இயலாது. எனவே இந்த சட்ட சபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


ஆனால் பெரிய திட்டங்களுக்கு நிதித்துறை அனுமதி அளிக்க மறுத்து வருவதால் சிறிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளே அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அமைச்சர்களும் தங்கள் துறை மானிய கோரிக்கையின் போது அடுத்த ஆண்டு செயல்படுத்த உள்ள திட்டங்களை அறிவிப்பர்; அத்துடன் புதிய திட்டங்களையும் அறிவிப்பர். பல்வேறு துறைகளில் ஊழல் நடந்து வருவதாக தி.மு.க. குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை தி.மு.க. சபையில் எழுப்ப உள்ளது.


எனவே சட்டசபை விவாதம் சூடுபிடிப்பது உறுதி. நாளை துவங்கும் சட்ட சபை ஏப்ரல் 9 வரை நடக்க உள்ளது. விடுமுறை நாட்கள் தவிர்த்து 23 நாட்கள் தொடர்ந்து சட்டசபை நடக்க உள்ளது. மார்ச் 21 மற்றும் ஏப். 4 என இரண்டு சனிக்கிழமைகளிலும் கூட சபை நடக்க உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்