கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள்.. திராவிட இயக்கத்தை காக்க எனக்கு ஆள் தேவை- வைரமுத்து ஆவேச உரை.

 


சென்னை: கருணாநிதியுடன், ஸ்டாலினை ஒப்பிடாதீர்கள் என்று கவிஞர் வைரமுத்து அதிரடியாக உரையாற்றியுள்ளார். சென்னையில், திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைரமுத்து பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருணாநிதி தீவிர அரசியலில் இருந்த காலத்திலிருந்தே, அவரது தீவிர ஆதரவாளராகவும், திராவிட கொள்கையால் அறியப்படுபவர் வைரமுத்து.


இந்த நிலையில் வைரமுத்து நேற்று மனதில் உள்ள நிறைய விஷயங்களை கொட்டி பேசியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், பேசுகையில், வைரமுத்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய் காணப்பட்டார். அவர் பேசியதைப் பாருங்கள்:


கட்டிக்காக்க ஆள் வேண்டும்
திராவிட இயக்கத்தை கட்டிக்காக்க எனக்கு ஆள் வேண்டும். திராவிட சிந்தனைகளை பரப்புவதற்கு எனக்கு ஆள் வேண்டும்.


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நகர்மயமாதல் நிகழ்ந்துள்ளது. இந்தப் பெயரைப் பெறுவதற்கு திராவிட முன்னோடிகள், ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்துள்ளனர்.


அதை தொடர்ச்சியாக செய்வதற்கு ஒரு தலைவன் வேண்டும். காலம் ஸ்டாலினை அனுப்பி உள்ளது என்பதற்காக, நீங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடையலாம் தோழர்களே.


பாசம் உள்ளது
ஸ்டாலினை நான் உற்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன். கலைஞரின் மகன் என்பதால் ஒரு பாசம் அவர் மீது இருக்கிறது. தலைவரின் குடும்பத்தில் இருப்பவர்களை நேசிப்பது தமிழின் கடமை. அந்த வகையில், அவரிடத்தில் இப்போது இருக்கக்கூடிய ஸ்டாலினையும் நேசிக்கிறோம்.


உற்று கவனித்தால் காலத்தால் அவர் தகுதி கூடி கொண்டே போகிறதா, அல்லது தன்னை தகவமைத்துக் கொள்கிறாரா, போகும் திசை சரியாக இருக்கிறதா என்றெல்லாம் உற்றுப் பார்க்கும்போது, எனக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.


இரு கட்சிகள்
தமிழகத்தில் இரண்டே இரண்டு கட்சிகள்தான் கட்டமைப்பு உள்ள கட்சிகள். ஒன்று திமுக இன்னொன்று அதிமுக. இதை சார்ந்துதான் தமிழ்நாட்டு அரசியல் நடந்தாக வேண்டும்.


இந்த இடத்தில் ஒருபடி மேலே திமுகவை உயர்த்தி பார்க்கிறேன். ஏனெனில் கட்டமைப்பு என்பது அதிகாரம் உள்ள போது வேறு, அதிகாரம் இல்லாத போது வேறு. ஒருவனின், பலவீனத்தை அறிவதற்கு அவனுக்கு பதவி கொடுத்து பார். அவனது பலத்தை அறிய வேண்டுமானால் அதிகாரத்தைப் பறித்து பாருங்கள் என்பார்கள்.


அதிகாரம்
அதிகாரத்தை பறித்த பிறகு ஒருவன் எஞ்சி நின்றால், அவன் பலமானவன். 8, 9 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அதிகாரம் மறுக்கப்பட்டு, அதிகாரம் சிதைக்கப்பட்ட ஒரு இயக்கத்தை, இவ்வளவு உயரமாக கட்டியெழுப்ப முடியும் என்றால், அது கருணாநிதியின் தனித்திறமை.


ஸ்டாலினின் தனித்திறமை என்று நினைக்கிறேன். எங்கள் அடித்தளம் கலைஞரால் கட்டுவிக்கப்பட்டது. அது ஆழமானது, வலிமையானது. வலிமையான கட்டடமாக ஸ்டாலின் எழுந்து நிற்கிறார்.


சுயநலம் இல்லை
எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. திராவிட நிலம் மற்றும், எனது மக்களை சார்ந்து நான் நிற்கிறேன். இப்போது கூட, கூழுக்கு வெங்காயம் கடித்து குடித்துக்கொண்டு இருக்கும், பச்சைமிளகாயை உப்பில் உரைத்து சாப்பிடுகிற ஏழைகளையும், மீட்டெடுக்க வேண்டுமானால் பெரியாரை முன்னிலைப்படுத்திய, அண்ணாவை முன்னிலைப்படுத்திய, கருணாநிதியை முன்னிலைப்படுத்திய, ஸ்டாலினை முன்னிலைப்படுத்த போகிற ஒரு களம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


உடையவில்லை திமுக
கலைஞருக்கு பிறகு கட்சி சிதையும் என்றார்கள். சீனியர்கள் முகம் காட்டுவார்கள் என்று சொன்னார்கள். உடைந்து போகும் என்றார்கள். உடையவில்லை.


சிதறவில்லை, முணுமுணுப்பு இல்லை, முன்கோபம் இல்லை, முன்பை விட வலிமையாக இருக்கும். நேற்றுகூட ஸ்டாலின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பெயரை முன்மொழிந்தார். ஒரு முணுமுணுப்பு இல்லை. தளபதி என்ற தலைவன் சொன்னதை ஒரு கட்சி அப்படியே வாங்கி வழிமொழிகிறது.


ஒப்பிடாதீர்கள்
ஸ்டாலினை கருணாநிதியுடன், ஒப்பிடாதீர்கள். ரோஜாவோடு மல்லிகையை மட்டுமல்ல, ரோஜாவோடு சாமந்தியை மட்டுமல்ல, ரோஜாவோடு தாமரையை மட்டுமில்லை, ரோஜாவோடு ரோஜாவைக்கூட ஒப்பிடாதீர்கள்.


அந்த ரோஜாவே வேறு. சூழல் வேறு, அது மலர்ந்த சூழல் வேறு, பக்கத்தில் இருக்கும் முள் வேறு, ரோஜாவோடு ரோஜாவை கூட ஒப்பிடாதீர்கள். கலைஞரோடு தளபதியோடு ஒப்பிடாதீர்கள்.


இரண்டுபேரும் ஒவ்வொரு உயரம்.. இரண்டும் வெவ்வேறு சிகரம். கலைஞர் காலத்தில் ஆரியம் மற்றும் டெல்லி இரண்டும்தான் எதிரிகள். இன்று காலம் மாறி உள்ளது. தமிழகம் துண்டாடப்படுகிறது. இவ்வாறு வைரமுத்து ஆவேசமாக பேசினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)