சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை- பள்ளிக் கல்வித்துறை...

தமிழகப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.


கரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் இயங்கக்கூடாது என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.


இதற்கிடையே அரசு உத்தரவை மீறி சில பள்ளிகள் இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்தன. இவை குறித்து தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாகின. நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கியதாகக் கூறப்பட்டது.


இந்நிலையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது