டெல்லி போலீஸுக்குத் தெரியாதா - அமித் ஷாவுக்கு கபில் சிபல் பதிலடி

டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி கலவரத்துக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்து, இஸ்லாமியர் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.


டெல்லி கலவரத்தில் இறந்த அத்தனை நபர்களையும் நான் இந்தியனாகவே பார்க்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்த கலவரங்களில்தான் 76 சதவிகிதம் இறந்தனர். எங்களை கேள்வி கேட்க அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை ” எனப் பதிலளித்திருந்தார்.


இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பசுக்களைக் காப்பதற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். உங்களால் மனிதர்களைக் காப்பாற்ற முடியுமா? அதற்காக சட்டம் இயற்ற வேண்டுமா என்ன? மனிதர்களையும் மனித வாழ்க்கையையும்விட பசு பாதுகாப்பு முக்கியமா என்ன? தற்போது உலகத்தில் இரண்டு வைரஸ்கள் இருக்கின்றன. ஒன்று கொரோனா வைரஸ் மற்றொன்று வகுப்புவாத வைரஸ். வகுப்புவாத வைரஸை ஆதரித்தது யார்? காயங்களுடன் ஒருவர் படுத்துக் கிடக்கிறார்.


அவரைத் தேசிய கீதம் பாடும்படி துன்புறுத்துகின்றனர். என்ன நடக்கிறது என எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால், டெல்லி போலீஸாருக்கு மட்டும் ஒன்றும் தெரியாது. இந்தக் கலவரத்துக்கு காரணமே வகுப்புவாத வைரஸ்தான்.


இந்த வகுப்புவாத வைரஸ் பரவுவதற்கு சிலரின் பேச்சுக்கள்தான் காரணமாக அமைந்தன. உள்துறை அமைச்சகம் அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ? உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஏதேனும் அறிக்கைவிட்டால், அதனால் அமைதியின்மை ஏற்படும் என சிறை வைத்தீர்கள்.


டெல்லியில் கலவரம் ஏற்படும் வகையில் பேசியவர்களின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை . இந்தியாவின் இரும்பு மனிதர் (சர்தார் வல்லபபாய் பட்டேல்) அமர்ந்திருந்த நாற்காலியில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


கலவரக்காரர்களுக்கு போலீஸார் உதவி செய்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு போலீஸார் உதவியதன் காரணமாகத்தான் இத்தனை மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கலவரக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை .


பால்கோட்டில் நீங்கள் நடத்திய தாக்குதல் நன்றாக இருந்தது. ஏன் சொந்த மக்களின் மீதே தாக்குதல் நடத்த வேண்டும். கலவரக்காரர்களுக்கு டெல்லி போலீஸார் உதவியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இருந்தும் அந்தக் காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை " என்றார். 


 


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image