தென்காசி அருகே பயங்கரம் -நாளை திருமணம்; இன்று மாப்பிள்ளை கொலை ..
தென்காசி அருகே நள்ளிரவில் புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர் ஜேசிபி ஆப்பரேட்டராக உள்ளார்.
இவருக்கு நாளை தென்மலையில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு தேவையான பணிகளை செய்து கொண்டு இருந்தனர்.
திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் நள்ளிரவு வரை ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், முனீஸ்வரன் அவரது அம்மா மற்றும் சகோதரி ஆகியோருடன் ஒரே அறையில் தூங்க சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் தன் கழுத்தை அறுத்து விட்டார்கள் என்று கூறிக்கொண்டே முனீஸ்வரன் எழுந்து வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். ஆனால் வீட்டு வாசலிலேயே அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்த சிவகிரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் புது மாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது கிராம மக்களிடையே பயத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.