கொரோனா தோன்றியது எப்படி... கடினமான உலக நாடுகளின் கேள்விக்கு பதிலளிக்க சீனாவுக்கு நெருக்குதல்
உலகம் முழுதும் ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கவும் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்படவும் காரணமாக இருக்கும் கொரோனா தோன்றியது எப்படி என்ற உலக நாடுகளின் கடினமான கேள்விக்கு சீனா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பொருளாதார நிலையும் ஸ்தம்பித்து உள்ளது.
தற்போது கொரோனாவை எதிர்க்கும் சூழலில் இந்த கேள்வி தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும் விரைவில் சீனா இக்கேள்வியை எதிர்கொள்ள நேரிடும்.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி முதன் முதலாக கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க ராணுவத்தால் பரவியிருக்கலாம் என்ற சீனாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. முதலில் சீனா இப்படி ஒரு நோய் வூகானில் பரவிவருவதை மறைக்க முயற்சித்தது.
அடுத்த கட்டத்தில் நோய் வெகுவாக பரவிய நிலையில் அதனை மறைக்க முடியாமல் அது குறித்த தகவல்களை ஊடகங்கள் வாயிலாக சீனா அறிவித்தது. ஆனால் அதற்குள் இந்த தொற்று நோய் அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது