நாஞ்சில் சம்பத் வீட்டை ரவுண்டு கட்டிய புதுச்சேரி போலீஸ்..! –கன்னியாகுமரியில் பரபரப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நாஞ்சில் சம்பத் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். அப்போது அவர் புதுச்சேரி மாநிலத்தில் பிரசாரத்துக்குச் சென்றுள்ளார்.


நெல்லிக்குப்பம் பகுதியில் வைத்தியலிங்கத்துக்கு ஆதரவாகப் பரப்புரை செய்துள்ளார். அந்தப் பிரசாரத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை அவதூறாகப் பேசியதாகத் தவளைகுப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராக வேண்டும் எனக் கடந்த 17-ம் தேதி ஐய்யாங்குப்பம் சர்க்கிளிலிருந்து சம்மன் அனுப்பப்படுள்ளது. அந்தச் சம்மனில் இந்த வழக்கு சம்பந்தமாக வரும் 21-ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.


இந்த நிலையில், புதுச்சேரி போலீஸார் இன்று அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு மணக்காவிளை பகுதியில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு வந்து அவரைக் கைது செய்ய முயன்றனர். அப்போது நாஞ்சில் சம்பத்தைக் கைது செய்ய தேவையான ஆவணங்கள் எதையும் புதுச்சேரி போலீஸ் எடுத்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், தகவல் அறிந்து திருவட்டார் போலீஸார் நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் புதுவை போலீஸ் மற்றும் நாஞ்சில் சம்பத்திடம் பேசினர். திருவட்டாறு காவல்துறை அதிகாரிகள் நாஞ்சில் சம்பத்திடம் இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராவதாக எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.


நாஞ்சில் சம்பத் எழுதிக் கொடுத்திள்ளார். இந்த நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரி போலீஸார் அங்கு நின்றுகொண்டிருப்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.


இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், “என் மீது போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக அந்தச் சம்மனுக்கு தபாலில் நேற்றே பதில் அனுபியிருக்கிறேன். இந்த நிலையில் இன்று காலையில் எந்தச் சம்மனும் இல்லாமல், தமிழக போலீஸாருக்குக்கூட தகவல் சொல்லாமல் புதுச்சேரி போலீஸார் என் வீட்டுக்கு வந்தனர்.


அந்த வழக்கு சம்பந்தமாக விளக்கம் அளிக்க அவர்கள் அனுப்பிய சம்மன் அடிப்படையில் வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. இருப்பினும் வலுக்கட்டாயமாக என்னை கைது செய்ய முயல்கிறார்கள்.


நான் தொடர்ச்சியாகத் திராவிட இயக்க சொற்பொழிவாளனாகப் பலரின் முகத்திரையைக் கிழித்து வருவதால் இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இது திட்டமிட்ட சதி. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது.


இது சட்டத்தின் மீது தொடுக்கப்பட்ட சம்மட்டி. கைது ஆக வேண்டுமா வேண்டாமா எனக் குழப்பமாக உள்ளது. இதுசம்பந்தமாக சட்ட வல்லுநர்களைச் சந்தித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளேன்” என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்