மீளத் தொடங்கிய வூகான் : கட்டுப்பாடுகளை விலக்கும் சீனா

கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வரும் சீனா, வூகானை தலைநகராகக் கொண்ட ஹூபேய் மாகாணத்தை முடக்கி வைத்திருந்த கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல தளர்த்தி வருகிறது.


சீனாவைப் பொறுத்தவரை, 81 ஆயிரத்து 93 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 5 ஆயிரத்து 120 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 72 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


3 ஆயிரத்து 270 பேர் உயிரிழந்தனர் என சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பரவும் அபாயம் குறைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி சீனாவில் உள்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 39 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.


அதற்கு முந்தைய நாளில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 46 ஆக இருந்த நிலையில், அதுவும் 39 ஆகக் குறைந்துள்ளது.


வைரஸ் பரவலின் மையமாக இருந்த வூகானில் தொடர்ந்து 5ஆவது நாளாக, புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. அதாவது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரம் அதிலிருந்து மீண்டுவரத் தொடங்கியுள்ளது.


ஏற்கெனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்களில் 9 பேர் வூகானில் உயிரிழந்தனர். வூகானுக்கு வெளியே கடந்த 17 நாட்களாக உள்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்றவில்லை.


இந்நிலையில், அலுவல் நிமித்தமாக வூகானில் இருப்பவர்கள் வெளியே செல்லவும், வெளியிலிருந்து வூகானுக்கு வரவும் நிபந்தனைகளோடு அனுமதிக்கப்படுகிறார்கள்.


உடல்வெப்ப நிலை சீராக இருந்து, பசுமை சுகாதாரக் குறியீடு வழங்கப்பட்டவர்கள் மட்டும் இவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள்.


வூகானை சேராதவர்கள் அந்நகரில் சிக்கியிருந்தால் வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். அதன் அடிப்படையில் பரிசோதனைக்குப் பிறகு அரசிடம் சான்றிதழ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை தடுப்பதற்காக, 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட வூகான் நகரம், கடந்த ஜனவரி 23ஆம் தேதி முடக்கப்பட்டது. படிப்படியாக இந்த முடக்கம் ஹூபேய் மாகாணத்திற்கும் வேறுபல நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.


தற்போது வூகான் நகரில் கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கப்படுவதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனர்.


இதேபோல திங்கட்கிழமை முதல், அனைத்து சர்வதேச விமானங்களும் பெய்ஜிங்கில் வேறொரு பகுதியில் தரையிறங்கி, பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே, பெய்ஜிங் நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு