எல்லோரையும் மிரட்டும் அமைச்சரை முதல்வர் எப்படி அனுமதிக்கிறார்;- கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேள்வி

எல்லோரையும் மிரட்டும் அமைச்சரை முதல்வர் எடப்பாடி எப்படி அனுமதிக்கிறார்? என விருதுநகர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


சிவகாசியில் பத்திரிகையாளர் கார்த்தி தாக்கப்பட்டதைக் கண்டித்து திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தோழமைக் கட்சிப் பிரமுகர்கள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராமச்சந்திரன், "கடந்த 3-ம் தேதியன்று சிவகாசியில் பத்திரிகையாளர் கார்த்தியின் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


நிருபர் கார்த்தி, சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே மனக்கசப்பு என்று எழுதியுள்ளார்.


அதற்கு அமைச்சர் மறுப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால், மாறாக ஆதரவாளர்களை ஏவி பத்திரிக்கையாளர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.


இந்தத் தாக்குதல் மற்ற பத்திரிக்கையாளர்களுக்கும் ஓர் எச்சரிக்கை என்ற பாணியில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.


அதற்கு முன்னால் நடந்த பொதுக் கூட்டத்தில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரை துப்பாக்கியால் சுடுவேன் என்று அமைச்சர் பேசுகிறார்.


எல்லோரையும் மிரட்டும் அமைச்சர் இந்த மாவட்டத்தில் இருக்கிறார். எப்படி முதலமைச்சர் இந்த அமைச்சரை அனுமதிக்கிறார் என்று தெரியவில்லை.


ஆனால், அராஜகம் செய்பவர்களைத் தட்டிக்கேட்க நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் அளவிற்கு, கார்த்தியைப் பார்த்து ஆறுதல் கூறியுள்ளோம். பொதுமக்களும் அச்சப்படாமல் இருக்க வேண்டும்.


அமைச்சர் இத்தகைய போக்கை திருத்திக் கொள்ளவில்லை என்றால் திருறுத்தப்படுவார். தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபடுவோம்.


இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்யவில்லை. உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தகுந்த தண்டனை அளித்தால்தான் இதுபோன்ற தவறுகள் இந்த மாவட்டத்தில் நடக்காது" என்றார்.


தொடர்ந்து பத்திரிக்கையாளர் தாக்குதல் சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கண்ணனை சந்தித்தும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாளை சந்தித்தும் திமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு கொடுத்தனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)