பெண்களே வேலைக்கு செல்லுங்கள்:விருதுநகரில் துணை கலெக்டராக பணியாற்றி, சாதித்துக்கொண்டிருப்பவர், சிக்கந்தர் பீவி. அவர், மனம் திறந்த போது....

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின், அரசு வேலைக்கு படித்து, விருதுநகரில் துணை கலெக்டராக பணியாற்றி, சாதித்துக்கொண்டிருப்பவர், சிக்கந்தர் பீவி. அவர், மனம் திறந்த போது....


சொந்த ஊர், மதுரை அருகே உள்ள, அச்சம்பத்து. கணவர் பீர்மீரான், தொழில்கள் செய்து வருகிறார். சிறுவயதில், ஏழ்மையில் சிரமப்பட்டேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, தந்தை இறந்து விட்ட தால், அம்மா தான், குடும்ப பொறுப்பை சுமந்தார்.நான், நல்ல படியாக படித்து முடித்தேன்.


19 வயதில், திருமணம்; இரண்டு குழந்தைகள். இருந்தாலும், 'வாழ்க்கை இன்னும் முடியவில்லை' என, என் உள்ளுணர்வுகூறியது.கணவரிடம், பி.எல்., படிக்க விருப்பம் தெரிவித்தேன்.


அவரது ஒத்துழைப்பால், பி.எல்., முடித்து, வழக்கறிஞர் பயிற்சி மேற்கொண்டேன்.


பெரும்பாலும், பெண்கள் தொடர்பான விவாகரத்து, வரதட்சணை போன்ற வழக்குகளையே சந்திக்க வேண்டி இருந்தது. வழக்கறிஞர் பயிற்சியும் சலித்து போக, 2012ல், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுக்கு முயற்சித்தேன்.ஒரு ஆண்டு, மிககடுமையாக படித்தேன். 'குருப் - 2' தேர்வில் வெற்றி பெற்றேன். 2013ல், சென்னை தலைமை செயலக சட்டத்துறையில், உதவி பிரிவு அலுவலராக பணியை துவங்கினேன்.ஏழாண்டுகளுக்கு பின், பதவி உயர்வு பெற்று, அங்கு பிரிவு அலுவலராகபணியாற்றுகிறேன்.


விருதுநகரில், கலெக்டரின் சட்டப்பணிகள் நேர்முக உதவியாளராகவும், கூடுதல் பொறுப்பு வகிக்கிறேன்.இளைஞர்கள், டி.என்.பி.எஸ்.சி.,போட்டி தேர்வுகளை, கடினம் என, நினைக்கின்றனர். உண்மையில், கடினமே இல்லை. பாடத்திட்டத்தை நன்றாக புரிந்து படித்தாலே, எளிதில் வெற்றி பெற்று விடலாம்.ஏனோ தானோ என்று இல்லாமல், 'நிச்சயம் அரசு பணி செய்வேன்' என்ற வைராக்கியத்துடன் படிக்க வேண்டும்.


நாளிதழ்படித்து, நாட்டு நடப்புகளை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். 'ஸ்மார்ட்' ஆகவும், அதே நேரம் ஒருமுகத்தன்மையுடனும் படித்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்.குழந்தைகள், குடும்பத்தை பார்க்க வேண்டிய கடமை இருந்தும், நான் மிகவும், 'ரிலாக்ஸாக' தான் படித்தேன்.


பெண்களுக்குசொல்லிக் கொள்ள விரும்புவது, நன்றாக படியுங்கள் என்பது தான்.குடும்பத்தினர், தங்கள் வீட்டு பெண்களிடம் நன்றாக ஆலோசனை செய்து, திருமணம் செய்து வையுங்கள். படிக்க ஆசை இருந்தால், படிக்க வையுங்கள்.


என்கணவர், எனக்கு அளித்த சுதந்திரத்தை தான், அவரது நேசமாக கருதுகிறேன். அவர் நினைத்தால், என்னை கட்டுப்படுத்தி இருக்கலாம். மாறாக அவர், என்னை முன்னேற்ற விரும்பினார்.


விதவைபெண்கள், 'வாழ்க்கையை இழந்துவிட்டோம்' என, சோர்ந்து போக வேண்டாம். போட்டி தேர்வில் வெற்றி பெற்றாலே, விதவை கோட்டாவில் பணி கிடைத்துவிடும்.தமிழ் வழி உட்பட பல வகைகளில், அரசு சலுகை தருகிறது. முறைகேடுகளை கண்டு ஒதுங்கிவிடாதீர். அரசுத் துறை நிர்வாகத்தில், நேர்மையானவர்கள் பலர் உள்ளனர்.முறைகேடுகளை நோக்கி செல்வோர் வாழ்நாள் தடை, சிறை போன்றவற்றை பரிசாக பெறுகிறனர்.


ஆண் மட்டும் வேலைக்கு செல்வதால், குடும்ப பொருளாதார நிலை உயராது. ஆண், பெண் இருவரும் பணி புரிந்தால் தான், சமுகத்தில் பொருளாதாரமும், குடும்ப மதிப்பும் உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.இவரது, 'இ - மெயில்' முகவரி:adv.sikkandargmail.com.* 'நிர்வாகம்' என, லோகோ வைக்கவும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு