வாழ்வென்பது பெருங்கனவு!

உனது கனவுகளை நீ நனவாக்க முயற்சிக்கவில்லை என்றால்... மற்றவர்கள் உன்னை வேலைக்கு அமர்த்தி அவர்களது கனவுகளை உன் மூலமாக  நிறைவேற்றிக் கொள்வார்கள் என்கிறான் மேலைநாட்டு அறிஞன் ஃப்ரா கிரே. உயர்கல்வி, பல்வேறு நிறுவனங்களில் வேலை என படிநிலைகள் பல  கடந்தபோதும் நெஞ்சத்தில் நிழலாடிய தொழில்முனைவோராகும் கனவு இன்று நிறைவேறியுள்ளது.


வீட்டிலேயே ஸ்ரீநிதி கிரியேஷன்ஸ் என்ற பெயரில்  ஃபிரைடல் ப்ளவுஸ், தையற் கலைப் பயிற்சி என நிறைவான ஒரு வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கைவினைக் கலைஞர் ஆனந்தலட்சுமி தன்  வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...


‘‘என் ஆரம்பகால கல்வி சொந்த ஊரான திருநெல்வேலியில். அப்பா சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ, அரசு ஊழியர். அம்மா எஸ்.எஸ்.எல்சி.  இருவருமே வாழ்வில் மிகக் கடினமான கட்டங்களை தாண்டியவர்கள். கடின உழைப்பாளிகள். கூட்டுக் குடும்பம். அம்மா சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை மிகப்பொறுமையாய் எல்லோரையும் கையாண்டு கவனிப்பது என் மனதில் பதிந்த முதல் விஷயம். நான் ஒரே பெண், இரு  தம்பிகள். 1980-ல் சென்னை வந்தோம்.


அப்பாவிற்கு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றம் வரும். எங்கள் படிப்பு கெடக் கூடாது என்பதால் தாத்தா வீட்டு  பக்கத்திலேயே குடியமர்த்தி, அவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொண்டார்.


அவர்கள் எங்களுக்காக ஏற்றுக்கொண்ட வாழ்க்கைமுறை மிகக் கடுமையானது. இது இரண்டாவது விஷயம். அவர்கள் இருவரும் தாங்கள் பட்ட  கஷ்டங்களை சொல்லி வளர்த்தார்கள்.


அதனால் எங்களுக்கு வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பக்குவம் வளர்ந்தது. இது மூன்றாவது விஷயம். பாட்டு,  நடனம், வீணை கற்றுக் கொண்டேன். இதில் அம்மா எதிர்பார்த்த அளவு ஆர்வம் ஏற்படவில்லை. அம்மாவிற்கு கைவினை மற்றும் தையல் கலையில்  ஆர்வம் இருந்ததால், என் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தன் கற்பனையில் புதியதாக உடை வடிவமைப்பார். அது கடைகளில் வாங்குவதுபோல்  இல்லாமல் வித்தியாசமாய் இருக்கும். தோழிகள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது.
இருந்தாலும் அதை ஆர்வத்துடன் போட்டுக்கொள்வேன்.


எனக்கு கண் பார்த்தால் கை செய்யும். செய்பவர்களை பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு  அதற்கான பொருள்கள் வாங்கியோ வீட்டில் இருப்பவற்றை வைத்தோ செய்துவிடுவேன். அம்மா மிகவும் ஊக்கப்படுத்துவார்கள்.


அம்மா சில வருடங்கள்  லெதர் கம்பெனியில் ஜாப் ஆர்டர் எடுத்து, பக்கத்தில் வசிக்கும் பெண்களின் உதவியுடன் பூர்த்தி செய்து, வரும் பணத்தை பிரித்து கொடுப்பார். அதனால்  அம்மாவிற்கு தனி மரியாதை உண்டு. என் திருமணத்திற்குப்பின் தம்பிகள் உதவியோடும், அப்பாவின் ஊக்கத்தோடும் கணினியில் சான்றிதழ் கல்வி  கற்று, ஒரு இன்டர்நெட் சென்டர் நடத்தி வந்தார்.
அம்மாவைபோல் ஒரு தொழில்முனைவோராக வேண்டும் என்ற ஆசை என் ஆழ்மனதில் வேர் விட ஆரம்பித்தது.


அவர் தன் 55-வது வயதில் தன்  நெடுநாள் கனவான (வாய்ப்பாட்டில்) இளங்கலை  பட்டம் பெற்றார். அவரே என் படிப்பிற்கும், தையல் கலைக்கும், சுயதொழில் ஆர்வத்திற்கும், பிற  கலை களுக்கும் முதல் குரு. 10, 12 வகுப்புகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேறினேன். அப்போது என் கனவினை சொன்னால் சிரிக்கத் தோன்றும்.  


என் பெயரைவிட என் பட்டங்கள் நீளமாய் இருக்கவேண்டும் என்பதுதான் அது. கல்லூரியில் சேர்ந்தால் ஒன்று மட்டும்தான் படிக்க முடியும் என்று  தொலைதூர கல்வியில் இளங்கலை சேர்ந்து, icwa-விற்கான படிப்பிற்கும், கணினியில் டிப்ளமோவிற்கும் சேர்ந்து படித்தேன்.
இளங்கலை, டிப்ளமோ, icwa  inter ஒரே நேரத்தில் முடித்தேன்.


முடித்தவுடன் கணினி வேலையை புறக்கணித்து அக்கவுன்டிங் பிரிவில் நல்ல  நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன், கனவுகள்  விரிந்தது. ஒரு ஆண்டில் பதவி உயர்வு கிடைத்து, வேலை பளு அதிகமானதால் icwa - ஃபைனலில்  ஒரு பிரிவு மட்டுமே எழுத முடிந்த நிலையில் 22 வயதில் திருமணம் ஆனது. என் விருப்பம்போல் படித்த நல்ல வேலையில் உள்ள, முக்கியமாக  கூடப் பிறந்தவர்கள்  நான்கு பேர் உள்ளவர் வரமாக அமைந்தார்.


மிக ஆச்சாரமான குடும்பம். தாய் மண்ணிலிருந்து நாற்றை பிடுங்கி வேறு மண்ணில்  நட்டதுபோல் கொஞ்சம் தடுமாறினேன். சிறு வயதில் அம்மாவிடம் பார்த்த பொறுமை கைகொடுத்தது.


வேலை நிமித்தம் கணவர் வேறு இடத்தில் இருந்தபோது பெற்றோர்  எங்களுக்காக விரும்பி ஏற்ற வாழ்க்கை முறை அனுபவம் கைகொடுத்தது.  கணவர் கணினி துறையில் இருந்ததால் வெளிநாடு செல்ல வேண்டி வந்ததும் வேலையை விட்டு  அவருடன் செல்ல நேர்ந்தது. அங்கு புதிய  வாழ்க்கை முறை, சிறிய நட்பு வட்டம். என் கலை ஆர்வம் தலை தூக்கியது.


ஸ்வெட்டர்  பின்னுதல், க்ரொசெட் போன்றவற்றை செம்மை  படுத்திக்கொள்ள முடிந்தது. சொல்லிக் கொடுத்தேன். நட்பு வட்டம் விரிந்தது. கணவரின் ஆர்வத்தால் நிறைய புத்தகங் கள் படிக்கும் வாய்ப்பும்  கிடைத்தது. அமெரிக்காவில் பல இடங்கள், ஸ்காட் லேண்டு, லண்டன், பிரான்ஸ் ஆகிய இடங்களை  பார்க்கவும் வாய்ப்புகள் ஏற்பட்டது.


படிப்பைத்தாண்டி பல விஷயங்கள் பிடிபட்டது. மூன்று வருடங்கள் இதுபோல் கழிந்தது. நானும் கணவரும் மிக ஒத்த கருத்துடன் பெற்றோரின்   அருகில் தான் இருக்க வேண்டும், எங்கள் குழந்தைகள் அவர்களின் அரவணைப்பை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.


இந்தியாவில்  செட்டில் ஆனோம். ஒரு மகன், ஒரு மகள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் கல்வித்தகுதியை M.Com.,M.phil., டெய்லரிங்கில் டிப்ளமோ,  ஆரி எம்ப்ராய்டரி, தஞ்சாவூர் பெயின்டிங், க்ராஃப்ட் டீசர் ட்ரைனிங் என என்னை மேம் படுத்திக்கொண்டேன். 


பள்ளியில்மல்டி மீடியா  ஆசிரியை, செய்தி வாசிப்பாளர், பெண்கள் நிகழ்ச்சிகள் தொகுப் பாளினி, முகவர் என பல பகுதி நேர வேலைகளில் ஈடுபட்டேன்.


கொஞ்சம் பிடித்து வரும்போது குடும்பச் சூழ்நிலை அதை விடும்படி அமையும். ஒரு கட்டத்தில் திறமை இருந்தும் எதையும் சாதிக்க முடியவில்லை  என்ற மன அழுத்தம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் எதிலும் ஈடுபடவில்லை.  


வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு பிடிக்கும் மூன்றாவது  விஷயமான பக்குவம் வந்தது. மகன் கல்லூரியில் விடுதி யில் சேர்ந்ததும், சுயதொழில் செய்யும் ஆழ்மன ஆசை தலையெடுத்தது. கணவர் மற்றும்  அம்மாவின் ஊக்கத்தோடு ஸ்ரீநிதி க்ரியேஷன்ஸ் என்ற பெயரில் கடந்த 7 வருடங்களாக ஆர்வமுள்ளவர்களுக்கு தையல், ஆரி எம்ப்ராய்டரி,  சிறியவர்களுக்கு விடுமுறையில் க்ராஃப்ட் வகுப்புகள் எடுக்கிறேன்.


சுயதொழில் என்பதைவிட எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்கு சொல்லித் தருவது, அவர்களை மேம்படுத்துவது மனதிற்கு மிகவும் சந்தோஷத்தை  கொடுக் கிறது. ஆரி ஃப்ரைடல் ப்ளவுஸ், பேட்டர்ன் ப்ளவுஸ் ஆர்டர்களுக்கும் செய்து கொடுக்கிறேன்.


இதனால் என்னிடம் கற்றுக்கொண்டவர்களுக்கு  ஆர்டர்கள் செய்யும்போது வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித்தர முடிகிறது. அவர்கள் தொழில்முனைவோராக ஆகும்போது பெருமிதம் ஏற்படுகிறது. என்  வேலைப்பாடு மற்றவர்களால் பாராட்டப்படும்போது மன நிறைவு கிடைக்கிறது.
தற்பொழுது கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி மெஷின் வாங்கி அதிலும் ஆர்டர்கள் செய்து கொடுத்து தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறேன்.


என் அடுத்த கனவு  என் மகள் கல்லூரியில் சேர்ந்ததும் ஸ்ரீநிதி க்ரியேஷன்ஸை ஒரு அகாடமியாக விரிவாக்கம் செய்து பல தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும்  என்பதாகும். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியத்துவம் மாறும்.


எனினும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கனவினை நோக்கி அடி  எடுத்து வைக்கவேண்டும். கனவு கானல் நீராகாமல் ஒரு நாள் கண்டிப்பாக முயற்சிக்கேற்ப கைகூடும்’’ என்றார் மகிழ்வாக.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு