கொரோனா: இந்தோனோஷியாவில் தொழுகைக்காக கூடிய பெருங்கூட்டம்...
ஜகார்தா: சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், எங்கும் கூட்டம் கூடக்கூடாது என உலக நாடுகள் கட்டுப்பாடு விதித்து வருகின்றன.
ஆனால், இதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் இந்தோனேஷியாவில் முஸ்லிம்கள் பங்கேற்ற மாபெரும் தொழுகை நிகழ்ச்சி நடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தோனேஷியா மற்றும் மலேசிய நாடுகள் இணைந்து தப்லிகி ஜமா-அத் என்ற சர்வதேச முஸ்லிம் இயக்கம் சார்பில் இந்தோனேஷியாவின் தெற்கு சுலேவேசியா மாகாணத்தில் உள்ள கோவ்வா என்ற இடத்தில் நடந்த மாபெரும் தொழுகை நிகழ்ச்சியில் ஆசிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகள் தங்கள் நாட்டில் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்து கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றன.
ஆனால் இந்தோனோஷியாவில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியதால் கொரோனா பாதிப்பும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு்ளளது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் 4 நாள் நடந்த தொழுகையில் 12 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரம் பங்கேற்றனர். இதில் 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.