கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள்! மாற்றுத்திறனாளி மகனுடன் வந்து ஆட்சியரை அதிரவைத்த பெண்.

விருதுநகரில் மாற்றுத்திறனாளி மகனை தூக்கிவந்த தாய், மகனைக் கவனிக்க வழியில்லாததால் கருணைக் கொலை செய்திட அனுமதி தரும்படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது..


விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் பாண்டிதேவி. மூளைவளர்ச்சி குறைபாடு உடைய தனது மகனை இடுப்பில் தூக்கிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றொரு கூட்ட அரங்கில் நடந்த வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றதால், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மக்களிடம் மனுக்களைப் பெற்றார். வழக்கம் போல், மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிக் கொண்டிருந்தார்..


கண்ணீருடன் கலங்கி நின்ற பாண்டிதேவியிடம் பேசினோம், “நானும் என் கணவர் முத்துக்கருப்புவும் கலப்புத் திருமணம் செஞ்சுக்கிட்டோம். கட்டட வேலை செய்துட்டு வந்த என் கணவர், கடந்த ஆண்டு மே 20-ம்தேதி வேலை பார்த்துட்டு இருக்கும் போது கட்டடத்துல இருந்து தவறி கீழே விழுந்து இறந்துட்டாரு. எங்களுக்கு ரெண்டு பிள்ளைகள். மூத்த மகள் 9-ம் வகுப்பு படிக்கிறாள்..


இவன்தான் என்னோட ரெண்டாவது மகன் மகாராஜன். வயசு 13 ஆகுது. பிறந்ததுல இருந்து மூளைவளர்ச்சி குறைபாடு. என்னோட அப்பா, அண்ணனும் இறந்துட்டாங்க. எங்க அம்மா மட்டும்தான் எனக்கு உதவியா இருக்காங்க. கணவர் இருந்த வரைக்கும் ரெண்டு பேரும் சேர்ந்தே பையனைக் கவனிச்சுக்கிட்டோம். அவர் இறந்ததுக்குப் பிறகு என்னால தனியா அவனைக் கவனிக்க முடியலை. எந்த வருமானமும் இல்லாததுனால குடும்பத்தைச் சமாளிக்க முடியலை..


குடும்பத்தோட கஷ்டத்துல என் மகளை, “பள்ளிக்கூடத்துக்குப் போகாத வேறெதாவது வேலைக்குப் போ”ன்னு சொன்னா, “நான் ஸ்கூலுக்குப் போவேன்”னு நிலைமை தெரியாம அடம்பிடிக்குறா. நான் 10-ம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிக்க வசதியில்ல. எனக்கு ஏதாவது வேலை வாய்ப்பு ஏற்படுத்தி


தாங்கன்னு கலெக்டர்ட்ட பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பலனும் இல்ல. அதனாலதான், இன்னைக்கு என் மகனையே தூக்கிட்டு வந்து, வேலை வாய்ப்பு கேட்டும், மகனைக் கருணைக் கொலை செய்திட அனுமதி கேட்டும் மனு கொடுத்திருக்கேன்” என விம்மி அழுதார்..


பத்திரிகையாளர்கள் கூடி, மீண்டும் பாண்டிதேவியை மாவட்ட வருவாய் அலுவலரிடம் அழைத்துச் சென்று நிலைமையை விளக்கியதும், “சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தற்காலிகமாக ஒரு வேலைக்கு உடனே ஏற்பாடு செய்கிறேன். எதிர்வரும் காலத்தில் இவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற பணி ஒதுக்கீடு செய்ய ஆட்சியருக்கும் பரிந்துரை செய்கிறேன்” என்றார்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்