இனி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி இல்லை.. காரணம் இதுதான்..!

இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் சரிந்து, அவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார‌ர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.


சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல், உலகளவில் பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு தள்ளியுள்ளது. இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளும் கடும் சரிவைக் கண்டன.


நேற்றைய தினம் மட்டும் முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12% வீழ்ச்சியடைந்தது. இதன் எதிரொலியாக அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8 பில்‌லியன் டாலர் அளவிற்கு சரிந்தது.


இதன் காரணமாக ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்திற்கு சென்றார். 2018ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்த அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.


நெருங்கும் ஐபிஎல் 2020 : ஆர்.சி.பி அணியின் பலம்; பலவீனம் என்ன?
சீன தொழிலதிபதிரான ஜாக் மாவின் நிகர சொத்து மதிப்பு 44.5 பில்லியன் டாலர் ஆகும். இது அம்பானியின் சொத்து மதிப்பை விட 2.6 பில்லியன் டாலர் அதிகம் ஆகும்.


அலிபாபாகுரூப் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் மாவும் தற்போதைய உலக பொருளாதார மந்த நிலையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளார். இருந்தாலும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியில் அம்பானி சந்தித்த சரிவு மிகப்பெரியது என்பதால் ஜாக் மா மீண்டும் முதலிடத்திற்கு வந்துவிட்டார்.


இதுதொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கூறும்போது, இந்த பொருளாதார வீழ்ச்சி தற்காலிகமாகவே அம்பானியை பாதித்திருப்பதாகவும் விரையில் அவர் மீண்டு வருவார் எனவும் தெரிவிக்கின்றனர்.


ஏனென்றால் அம்பானியின் எண்ணெய் நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்திருந்தாலும், அவர் தொடங்கிய ஜியோ நிறுவனம் 3 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் இடத்தை பிடித்திருப்பதாகவும், அதன் பங்குகள் நடப்பு ஆண்டு முதல் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர்.