சங்கரன்கோவில், வி.கே.புரத்திலிருந்து நெல்லைக்கு அரசு ஏசி பஸ் இயக்கம்
சங்கரன்கோவில், மார்ச் 6: சங்கரன்கோவில், வி.கே.புரத்தில் இருந்து நெல்லைக்கு அரசு ஏசி பஸ் இயக்கப்படுகிறது. சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு ஏசி பஸ் இயக்க துவக்க விழா நடந்தது. தென்காசி கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தலைமை வகித்தார்.
அமைச்சர் ராஜலட்சுமி, பஸ் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மனோகரன் எம்எல்ஏ மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பஸ்நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கும் காலை 5.10 மணி, 8.15, 11.45, மாலை 3.15, 6.35 மணிக்கும், சங்கரன்கோவிலில் இருந்து காலை 6.40 மணி, 10 மணி, மதியம் 1.45, மாலை 5 மணி, இரவு 8.05 மணிக்கும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் கட்டணமாக ரூ.72 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் பாபநாசம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், வி.கே.புரத்தில் இருந்து நெல்லைக்கு அரசு ஏசி பேருந்து இயக்க துவக்க நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது.
நெல்லை பொதுமேலாளர் துரைராஜ் தலைமை வகித்தார். துணை மேலாளர் சசிகுமார் (வணிகம்), துணை மேலாளர் அழகிரிசாமி (தொழில்நுட்பம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாபநாசம் கிளை மேலாளர் ராஜேஷன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முருகையாபாண்டின் எம்எல்ஏ கலந்து கொண்டு கொடியசைத்து ஏசி பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இப்பேருந்து இன்று(6ம் தேதி) முதல் தினமும் பாபநாசத்தில் இருந்து காலை 7 மணி, 10 மணி, மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7.30 மணி என 5 முறை இயக்கப்படுகிறது.
இதற்கான கட்டணம் பாபநாசத்தில் இருந்து ரூ.59, அம்பையில் இருந்து ரூ.47 வசூலிக்கப்படுகிறது. பாபநாசம், வி.கே.புரம், அம்பை கல்லிடைக்குறிச்சியில் மட்டுமே நிறுத்தப்படும். பிபி பேருந்து போன்று பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு ஒரு மணி நேரத்தில் சென்றடையும்.
நிகழ்ச்சியில் டிவிஷெனல் மேலாளர் பழனியப்பன், துணை மேலாளர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் துர்க்கைதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சுப்பையா, மினிசூப்பர் மார்க்கெட் கூட்டுறவு துணை தலைவர் அசோக், நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் அருண், பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், சிவந்திபுரம் பஞ். முன்னாள் துணை தலைவர் பிராங்கிளின், மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கைக்கண்டார், மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, நகர மகளிரணி செயலாளர் இமாகுலேட், இணை செயலாளர் பத்மா, இசக்கிமுத்து, ஆபிரகாம், முனியசாமி கல்யாணசுந்தரம், குஞ்சுபாலு, சக்திவேல்கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.