கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி’ - வதந்தி வீடியோ வெளியிட்டதாக ஹீலர் பாஸ்கர் கைது

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி செய்திகளை பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் 195 பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் குறித்து வதந்தியை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்ற வீடியோ மூலம் பிரபலமடைந்த ஹீலர் பாஸ்கர், தற்போது கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், “சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி. மக்கள் தொகையை குறைக்கவே அவர்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நம் அமைச்சர்கள் எதை செய்ய வேண்டும் என்ற தகவல்களை அவர்கள் இலுமினாட்டிகள் தான் தருகின்றனர்.


கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களை கூட திட்டமிட்டு ஊசிப்போட்டு கொலை செய்கின்றனர்“ என்று அந்த வீடியோவில் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலியான தகவல்கள் இடம்பெற்றிருந்தது.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கோவை சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.