ஆபரேஷன் கமலா இல்லை.. இது ஆபரேஷன் சிந்தியா.. ம.பியில் புயலை கிளப்பும் ஜோதிராதித்யா.. பரபர பின்னணி!

போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக களமிறங்கி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் 16 பேர் தலைமறைவாகி உள்ளனர். 16 எம்எல்ஏக்களும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


ஆனால் இது பாஜகவின் வேலை கிடையாது, கமல்நாத் ஆட்சி ஆட்டம் காண்பதற்கு பின் ஆப்ரேஷன் கமலா எதுவும் கிடையாது என்று கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்சனை என்கிறார்கள். இதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.


மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. மத்திய பிரதேசத்தில் கமல்நாத்திற்கு அடுத்தபடியாக அக்கட்சியின் அடுத்த முக்கிய


தலைவர்தான் ஜோதிராதித்யா சிந்தியா. அங்கு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்காக இவர் தீவிரமாக உழைத்தார். இதனால் ஜோதிராதித்யா சிந்தியா அங்கு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால் ராகுல் காந்தி முதல்வர் பதவியை கமல் நாத்திடம் கொடுத்தார்.


அப்போதே ஜோதிராதித்யா சிந்தியா அதிர்ச்சிக்கு உள்ளானார். தனது அதிருப்தியையே இவர் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். வெளிப்படையாக அவ்வப்போது அரசை விமர்சனம் செய்தார்.


இதன்பின் நடந்த லோக்சபா தேர்தலின் இவரோ, இவரின் ஆதரவாளர்களோ பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசத்தில் வென்ற காங்கிரஸ், லோக்சபா தேர்தலில் மோசமாக தோற்றது.


அதன்பின் வரிசையாக நிறைய அதிரடி திருப்பங்கள் நடக்க தொடங்கியது. கட்சிக்குள் எம்எல்ஏக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசை எதிர்த்தனர். ஜோதிராதித்யா சிந்தியாவின் கோபம்தான் காரணம் என்று கூறினார்கள்.


இதன்பின் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதனால் ஜோதிராதித்யா சிந்தியா தலைவர் ஆகிறாரா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் மீண்டும் சோனியா காந்தி இடைக்கால தலைவர் ஆனார்.


சிந்தியாவிற்கும், சோனியாவிற்கு அவ்வளவு நெருக்கம் இல்லை. ராகுல் மட்டுமே சிந்தியா மீது நம்பிக்கை வைத்து இருந்தார். சோனியா வந்த பின் ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் மேலும் ஒதுக்கப்பட்டார்.


கமல் நாத் ஆதரவாளர்களுக்கு கட்சியில் அதிக அளவில் ஆதரவு வழங்கப்பட்டது. அவர்களின் கை ஓங்கியது. இதனால்தான் தற்போது ஜோதிராதித்யா சிந்தியா அதிர்ச்சியில் இருந்தார். இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் புதிய திருப்பமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.


மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 17 எம்எல்ஏக்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர் என்று கூறப்படுகிறது.


சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் இவர்கள். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் பெங்களூரில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிந்தியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகி என்பதை நீக்கிவிட்டு கிரிக்கெட் ஆர்வலர் என்று மட்டும் வைத்து இருந்தார். அதன்பின் ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினார்.


கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேசிய, சிந்தியா, மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆசிவாக்குறுதிகள் பல இன்னும் நிஜமாகவில்லை.
உங்கள் எல்லோருடைய கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.


உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நான் உங்களுடன் உடன் இருப்பேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நான் இருப்பேன். நானே அரசுக்கு எதிராக போராடுவேன்.


சாலையில் இறங்கி போராடுவேன் என்று கூறினார்.
தற்போது அவர் சொன்னது போலவே ஆட்சி கவிழும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.


தன்னுடைய விசுவாசிகளை அழைத்துக்கொண்டு மொத்தமாக சிந்தியா தலைமறைவாகி உள்ளார். அவரின் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.


இதனால் சிந்தியா என்ன மாதிரியான முடிவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. இவரை பாஜக தன் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு