புதுச்சேரியில் மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிக் காணப்பட்ட சுற்றுலா நகரம்...


புதுச்சேரியில் மக்கள் ஊரடங்கு காரணமாக, பேருந்து நிலையம், கடை வீதிகள், கடற்கரைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.


நாடு முழுவதும் பிரதமர் இன்று (மார்ச் 22) மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தினார். இதனையொட்டி, புதுச்சேரியிலும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 144 தடை உத்தரவு நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.


மக்கள் ஊரடங்கை ஒட்டி இன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. மாநிலம் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


புதுச்சேரியின் புதிய பேருந்து நிலையம், கடைவீதிகள் அடங்கிய அண்ணா சாலை, நேரு வீதி ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி உள்ளன. இங்குள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.


புதுச்சேரியில் ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்படும் சாலை
கடற்கரைச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வணிக வளாகங்கள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பெரிய மார்க்கெட் உட்பட அனைத்து வணிக வளாகங்களும் மூடப்பட்டுள்ளன.