கொரோனா -செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்...
கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்கவும் பரவாமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.....
கொரோனா வைரஸ் பரவிவருவதைத் தடுக்கவும் நம்மை நாமே தற்காத்துக் கொள்ளவும் என்ன செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் விளக்கி வருகின்றனர். பல்வேறு வதந்திகள், போலி மருந்துகள் ஒருபுறம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் சில முக்கியமான கருத்துகள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.
முகக் கவசம் அணிதல் -கொரோனாவால் பாதிக்கப்படாதிருக்க முகக் கவசம் அணிவது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. ஆனால் முகக் கவசம் என்பது நம்மிடமிருந்து பிறருக்கு நோய் பரவாமல் தடுப்பதற்காகத்தான் பயன்படுகிறது. வைரஸ் நம்மை தாக்காமல் காப்பதில் அந்த முகக் கவசங்கள் அதிகமான உதவி செய்யாது.
மருத்துவமனைக்கு எப்போது செல்ல வேண்டும்? சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளுக்கு ஓட வேண்டிய அவசியமில்லை.
நீண்ட நேரம் அங்கு காத்திருக்க நேரிடலாம் என்பதுடன் காத்திருப்பவர்களிடமிருந்தும் நமக்கு நோய் தொற்றிக் கொள்ளலாம். கடந்த 15 நாட்களுக்குள் வெளிநாடு சென்றிருந்தாலோ அல்லது சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ காய்ச்சல் சளி போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்கு செல்லாமலே வீட்டில் இருந்தே சாம்பிள்களை சேகரிக்க மருத்துவமனைகளுக்கு போன் மூலம் தகவல் அளிக்கலாம் .குடும்ப மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வீட்டிலேயே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.