கடுமையானது போக்சோ சட்டம்: அரசாணை வெளியிட்டது மத்திய அரசு

புதுடில்லி,: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கையாளும், 'போக்சோ' சட்டத்தின் விதிகளை, மேலும் கடுமையாக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்களை இழைப்போர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இச்சட்டம், 2012ல், அமலுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய அரசு, இச்சட்டத்தில், மேலும் சில திருத்தங்களை செய்து, அதன்படி விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்கியுள்ளது. அதற்கான அரசாணையை, அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


அதில், கூறப்பட்டுள்ளதாவது:புதிய சட்டத்தின் கீழ், பள்ளிகள், காப்பகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அனைத்து விபரங்களும், போலீஸ் அதிகாரிகள் மூலம் சரி பார்க்கப்படும், குழந்தைகளின் ஆபாச பதிவுகள் பகிரப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும் வகையில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.


குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ'க்களை யாராவது பகிர்ந்தாலோ, சேமித்து வைத்திருந்தாலோ, அதை, சைபர் கிரைம் அல்லது சிறப்பு சிறார் போலீஸ் பிரிவிடம் புகார் அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. குழந்தைகள் பாதுகாப்பிற்கான கொள்கையை வகுக்கவும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணவும், மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், அமைப்புகளும் பின்பற்ற வேண்டும். இந்த புதிய சட்டத்தின் கீழ், இருக்கும் பொறுப்புகளை உணர்த்த, அந்த அமைப்புகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் தேவையான பயிற்சிகளை வழங்கும்.


போலீஸ் அதிகாரிகள், தடயவியல் நிபுணர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளி மாணவ - மாணவியருக்கு, தங்களின் உடல் மற்றும் மனரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான பாடங்களை, மத்திய - மாநில கல்வி அமைப்புகள் வடிவமைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்