மாவட்ட எல்லைகள் மூடல்... இன்று முதல் அமல்...

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க, தமிழ்நாட்டில், இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. அனைத்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளை, வருகிற 31ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அத்தியாவசிய போக்குவரத்து தவிர, மற்ற பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவை இயங்காது என்றும் அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல், தடுக்க தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்துதல் குறித்து, சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து உரையாற்றினார். Social Distancing எனப்படும் தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து, மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்றுநோய்கள் சட்டம் 1897ல் பிரிவு 2ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுவதாக, முதலமைச்சர் அறிவித்தார். இந்த உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கி, வருகிற 31ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


இந்த அறிவிக்கையை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.


இதன்படி, அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.


அத்தியாவசியப் பொருட்களான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்படும்.



அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவை தொடர்ந்து இயங்கும்.


தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும்.


எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.


அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர வேண்டும்.


மேலும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவதாக, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு எந்த தடையும் இல்லை என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.


கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்