நகையைத் தர முடியாது!’ - மறுத்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்; சரணடைந்த கணவன்....  

நகைகளைக் கொடுக்க மறுத்த மனைவியைக் கொலை செய்த கணவன், போலீஸில் சரணடைந்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம்மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ளது கிருஷ்ணாபுரம் மீனவர் காலனி. இப்பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன்.


இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது 2 வயதுப் பெண் குழந்தை ஒன்று உள்ளது.இந்த நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார் முனீஸ்வரன். ஆனால், அங்கிருந்து அவரின் மனைவி தனலட்சுமியின் குடும்பச் செலவுகளுக்கு பணம் ஏதும் அனுப்பாமல் இருந்து வந்துள்ளார்.


இதனிடையே, சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊர் திரும்பிய பிறகு முனீஸ்வரன் - தனலட்சுமி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இதேபோல் கடந்த 18-ம் தேதி இரவு தன் மனைவி அணிந்திருந்த நகைகளைக் கேட்டு தகராறு செய்துள்ளார் முனீஸ்வரன்.


தனலட்சுமி நகைகளைத் தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.


தனலட்சுமிஉயிரிழந்த நிலையில் தேவிப்பட்டினம் காவல் நிலையத்துக்குச் சென்ற முனீஸ்வரன் அங்கிருந்த போலீஸாரிடம், தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறி சரண் அடைந்துள்ளார்.


இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், தனலட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.