ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை, போலீஸாரிடம் ஓட்டுநர் ஒப்படைத்தார்

காரைக்குடியில் ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை, போலீஸாரிடம் ஓட்டுநர் ஒப்படைத்தார். இதுபோன்று தொடர்ந்து நேர்மையாக நடந்து வரும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


காரைக்குடி முத்துராமலிங்கத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் கலைஞர்(40). இவரும், இவரது மூன்று சகோதரர்களும் ஆட்டோ ஓட்டுநர்களாக உள்ளனர்.


புதிய பேருந்து நிலையம் பகுதியில் கலைஞர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது ஆட்டோவில் நேற்று முன்தினம் மாலை 22 வயது இளைஞர் காரைக் குடியில் இருந்து கண்டனூர் சென்றார்.


அந்த இளைஞரை இறக்கிவிட்டு, மீண்டும் காரைக்குடி வந்த ஆட்டோ ஓட்டுநர், மற்றொரு பயணியை ஆட்டோவில் ஏற்றினார். அப்போது ஆட்டோவில் மணிபர்ஸ் இருந்தது. அதில் ரூ.13,500, ஏடிஎம் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவை இருந்தன. ஆனால் மொபைல் எண் இல்லை.


வாக்காளர் அட்டை மூலம் அந்த இளைஞர் கண்டனூரைச் சேர்ந்த சுந்தர்ஹரிகரன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்தப் பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்குமாறு காரைக்குடி வடக்கு போலீஸாரிடம் ஆட்டோ ஓட்டுநர் கலைஞர் கொடுத்தார்.


இதேபோல் 2009-ம் ஆண்டு காரைக்குடி அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் தேவர் சிலை அருகே தனது கைப்பையைத் தவறவிட்டார். அதில் ரூ.1.5 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தன. அதைக் கண்டெடுத்த ஆட்டோ ஓட்டுநர் கலைஞர் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.


தொடர்ந்து நேர்மையாக நடந்து கொள்ளும் கலைஞரை பொது மக்கள் பாராட்டினர்.


மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் கலைஞரின் சகோதரர் செல்லையாவின் ஆட்டோவில் பயணம் செய்த இளைஞர் பையில் கட்டுக்கட்டாகப் பணம் வைத்திருந்தார்.


முகவரியை முன்னுக்குப்பின் முரணாகக் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த செல்லையா போலீஸாரிடம் இளைஞரைப் பிடித்துக் கொடுத்தார்.


விசாரணையில் திருவாடானையைச் சேர்ந்த புளி வியாபாரி ஒருவரிடம் ரூ.5.5 லட்சத்தை அந்த இளைஞர் திருடியது தெரிய வந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு