துக்ளக் விழாவில் பெரியார் குறித்த பேச்சு: ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழக பேரணி குறித்து பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட செயலாளர் உமாபதி என்பவர் புகார் அளித்தார். ஆனால், புகார்மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆறுமுகம் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்து, ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என வாதிட்டார். இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இடையீட்டு மனுவை திரும்பப்பெறுமாறு அறிவுறுத்தி தள்ளுபடி செய்தது எழும்பூர் நீதிமன்றம்.