சீனர்கள்போல இருப்பதால் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது: காவல் ஆணையரிடம் புகார்


சீனர்கள்போல இருப்பதால் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது: காவல் ஆணையரிடம் புகார் அளித்த வடகிழக்கு மாநில நலச் சங்கம்


வடகிழக்கு மாணவர்கள், தொழிலாளர்களைக் கேலி, கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 


வடகிழக்கு மாநிலங்களிலிருந்து சென்னையிலுள்ள கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்துவருகின்றனர். அதேபோல, உணவகங்கள், மால்கள், தியேட்டர்கள், ஹோட்டல்களில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலபிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை பார்க்கின்றனர்.


இந்த நிலையில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் எதிரொலியாக இவர்களுக்கு சென்னைவாசிகளால் பிரச்சனை ஏற்படுள்ளது.


வைரஸ் சீனாவிலிருந்து பரவியதால் பார்ப்பதற்கு வடகிழக்கு மாநில மாணவர்களும் இளைஞர்களும் சீனர்கள் போல் இருப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


நம்மிடம் பேசிய வட கிழக்கு மாநில நலச் சங்கத்தின் தலைவரான வபாங் தோஷி, வடகிழக்கு மாநில மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு என சிறப்பு உதவி தொலைபேசி எண்கள் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.


அதேபோல சென்னையிலும் அமல்படுத்த வேண்டும். பார்ப்பதற்கு சீனர்கள் போல் உள்ளதால் தங்களை சென்னையில் சிலர் கொரோனா, சீனக் கொரோனா எனக் கூறி மனவேதனையை ஏற்படுதியுள்ளதாகவும், இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் கூறினார்.


அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில்  கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி பயின்று வரும் வடகிழக்கு மாநில மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும் ரயில் சேவையும் விமான சேவையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த பிரச்சினை தீரும் வரை வடகிழக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சென்னையிலேயே தங்குவதற்கு உரிய ஆவணம் செய்ய அரசு முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.


மேலும் இங்கு பணிபுரியும் பெரும்பான்மையான வடகிழக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் உணவு விடுதிகளிலும் மால்களிலும் சில்லரை விற்பனை நிலையங்களிலும் சொற்ப ஊதியத்திற்கு உரிய  பணிபாதுகாப்பு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர்.


தற்போது தொடர் விடுமுறையில் அறிவிக்கப்பட்டதால் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்தும் அரசு கவனத்திற்கு எடுத்து செல்ல காவல் ஆணையர் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


குறிப்பாக எங்களின் பாதுகாப்பிற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் காவல்துறை ஆணையரிடம் தெரிவித்ததாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், வடகிழக்கு மாநில மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்களை யாரேனும் கேலி கிண்டல் செய்தால் வடமாநிலத்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் கேலி கிண்டல் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.