"ஆன்லைன் டெலிவரி செய்யணும்னா இதை கடைபிடிங்க” - சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக பொதுப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதோடு, ஆட்டோ, டாக்சி போன்ற சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆன்லைன் சேவைகளுக்கும் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கியுள்ளது.


அந்த வகையில், சென்னையில் ஆன்லைன் டெலிவரி சேவைகளுக்கான நெறிமுறைகளை வகுத்து பெருநகர சென்னை மாநகராட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கான ஆன்லைன் டெலிவரிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


டெலிவரி சேவை புரியும் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம், கையுறை, தொப்பி போன்றவற்றை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். குறிப்பாக டெலிவரி செய்யும் இடங்களில் தொடர்பில்லாத (Non-Contact) விநியோகத்தை பின்பற்ற வேண்டும்.


டெலிவரி செய்யப்படும் இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொள்வார்கள். யாரேனும் நெறிமுறைகளை பின்பற்றாமல் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுளது.