மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சி சென்ற இளைஞரை சுற்றிவளைத்த கும்பல் ஒன்று சரமாரியாக ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் 19 வயதான ராஜேஷ். வீட்டிற்கு எதிரே மெரினா கடற்கரை உள்ளதால் தினமும் அங்கு உறங்குவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை இரவு ராஜேஷ் மது போதையில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார்.
சிறிது தூரம் நடந்து செல்லலாம் என்று நினைத்த ராஜேஷ் கண்ணகி சர்வீஸ் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அடையளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை பின் தொடர்ந்துள்ளது.
மேலும் சிறிது நேரத்தில் ராஜேஷை துரத்த தொடங்கிய கும்பல் கூச்சலிட்டபடி கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக துரத்தி துரத்தி வெட்டியுள்ளது.
சுற்றி இருந்த பொதுமக்கள் சிதறி ஓட கண்இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியது. வெட்டுக்காயத்துடன் நிலை தடுமாறி சாலையில் சரிந்த ராஜேஷை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் வெட்டப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மெரினா கடற்கரை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாக சென்னை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குற்றச்சம்பவங்களை குறைப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்ற விகிதத்தில் மாநகர் முழுவதும் 80 சதவீத பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றது. இதனால் 2019 ஆம் ஆண்டு சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் பாதியாக குறைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காவல் கண்காணிப்பு அதிகம் உள்ள, மெரினா கடற்கரை பகுதியில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் குற்றவாளிகளை பிடிக்க சென்னை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முடிக்கிவிட்டுள்ளனர்.